காவிரி மேலாண்மை ஆணையமா! கர்நாடக ஜால்ரா ஆணையமா? எங்கே போனார் எடப்பாடி?

மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் கொடுக்கும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்திருக்கிறது.


ஏனென்றால், நல்ல மழை பெய்யும்போது, கர்நாடக அணைகள் நிரம்பி, தண்ணீர் தானாகவே தமிழகம் வந்து சேரும் என்பது எல்லோரும் அறிந்த தகவல்தான். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு கடுமையான உத்தரவை பிறப்பிக்காமல், மழை பெய்தால் தண்ணீர் விடுங்கள் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் தெனாவெட்டாகப் பேசி இருக்கிறார். இவர்தான், தமிழகத்திற்குரிய பங்கு தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டிய காவிரி ஆணையத்தின் தலைவர் என்பதுதான் ஆச்சர்யம்.

மழை பெய்தால் தண்ணீரைத் திறந்துவிடுங்கள் என்று சொல்வதற்கு மேலாண்மை ஆணையம் எதற்கு? கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறது என்றுதானே உச்ச நீதிமன்றம் வரைக்கும் போய் காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கினோம். ஆனால், அந்த ஆணையம் காபியும் சமோசாவும் சாப்பிட்டு இப்படியொரு தீர்ப்பு சொல்வதற்கா உருவானது?

தண்ணீர் திறக்கவில்லை என்றால் திறந்துவிட வேண்டியதுதானே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி, அதை ஏன் செய்ய மறுக்கிறது? அதேபோன்று மேகதாது அணை குறித்தும் ஆணையம் தமிழகத்திற்கு சார்பாக எந்த ஒரு உறுதியும் அளிக்க மறுக்கிறது என்பதுதான் வேதனை. எந்த வகையிலும் தமிழகத்திற்கு சாதகமாக இல்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் செயல்பட்டு உள்ளது என்றாலும், இதுவரை தமிழக முதல்வரோ, எதிர்க்கட்சித் தலைவரோ, இதனை கண்டிக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.