ஆட்களை குறைக்கப்போகிறதா ஐ.டி. நிறுவனங்கள்..? எந்தெந்த நிறுவனங்களுக்கு சிக்கல்?

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இந்திய பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டு இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.


நாட்டில் உள்ள அனைத்து முக்கிய துறைகளும் முற்றிலும் முடங்கியுள்ள இந்த நேரத்தில் ஐடி துறை மட்டும் கொஞ்சம் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.

இந்த துறையில் உள்ள முண்ணனி மென்பொருள் நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகர லாபம் 5.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் விப்ரோ தனது செலவீனங்களை குறைக்கும் வகையில் ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் சம்பளம் இல்லா விடுப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தில் 187,318 பணியாளர்கள் பணிபுரிந்த நிலையில் அதிகப்படியான செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நான்காவது காலாண்டில் 182,886 ஊழியர்களாக குறைத்துள்ளது இந்த நிறுவனம்.

2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிதாக ஊழியர்களை எடுக்கப்போவதில்லை எனவும் கேம்பஸ் பணியாளர் தேர்வும் கிடையாது என தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

கோரோனா வைரஸ் பாதிப்பால் விப்ரோவில் பணியாற்றும் 93 சதவீத ஊழியர்கள் தற்போது வீடுகளில் இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இந்த வேளையில் செலவினங்களை எங்கெல்லாம் கட்டுப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் செலவின கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் இந்தியாவில் தொழில்நுட்ப கட்டமைப்பு வருவாய் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் 14 முதல் 16 மில்லியன் டாலர் அளவு வருமானம் குறைந்துள்ளது எனவும் இந்த கடினமான நேரத்தில் தேவையற்ற பணியாளர்களை‌ நீண்ட கால விடுப்பில் அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம்.

கடந்த 15 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வணிக செயல்பாடுகள் காரணமாக விப்ரோ நிறுவனம் 0.7 முதல் 0.8% வரை வருமான இழப்பை சந்தித்துள்ளது. இதனால் விப்ரோவின் 4 வது காலாண்டு நிகர லாபம் 6% குறைந்து ரூ .2345 கோடியாக உள்ளது.

இந்த நிலையில் முண்ணனி மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 4.5 லட்சம் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தில்லை எனவும் ஆனால் இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்க உத்தேசம் இல்லை என்று கூறியுள்ளது டாடா குழும நிறுவனம். 

முண்ணனி மென்பொருள் நிறுவனங்கள் சம்பள உயர்வு மற்றும் வேலையிழப்பை அறிவித்து வருவதால் இந்த துறையில் உள்ள சிறிய நிறுவனங்கள் என்ன செய்ய போகிறது என்று கடுமையான அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் இந்த துறையில் பணிபுரியும் ஊழியர்கள்.