காங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க.? ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா?

உள்ளாட்சி தொடர்பான வம்பு, வழக்குகளுக்கு எதிராக கே.எஸ்.அழகிரி அறிக்கை கொடுத்த விவகாரம், தி.மு.க. கூட்டணியை கிட்டத்தட்ட உடைத்தேவிட்டது என்று சொல்லலாம்.


ஏனென்றால், காங்கிரஸ்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்று துரைமுருகன் நேரடியாகவே கேட்டுவிட்டார். இதைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியை தி.மு.க. திட்டம் போட்டு வெளியே அனுப்புகிறதோ என்று அரசியல் பார்வையாளர்கள் யோசிக்கிறார்கள். ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் விவகாரங்களில் இதுபோன்ற பிரச்னை வருவது சகஜம்தான்.

அ.தி.மு.க.வை இதைவிட கடுமையாகவே பொன்னார் விமர்சனம் செய்தார். அவரை நேரடியாக ஜெயக்குமார் தாக்கி அறிக்கை விட்டாரே தவிர, பா.ஜ.க.வை பற்றியோ, கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை.

ஆனால், அழகிரி விவகாரத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு, டெல்லி கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்தது. அது மட்டுமின்றி டி.ஆர்.பாலு, துரைமுருகன் போன்றவர்கள் வேண்டுமென்றே, போனால் போகட்டும் போடா என்பது போன்று பேட்டி கொடுக்கிறார்கள்.

கூட்டணி தலைவரான ஸ்டாலினோ இதுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பொங்கலுக்கு தொண்டர்களை சந்தித்த நேரத்திலும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை. ஆக, ஏதோ திட்டம் போடுது தி.மு.க. என்பது மட்டும் உறுதி. அதில், காங்கிரஸ் சிக்குமா என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.