தேசிய தலைநகரத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள் தன்னிச்சையானவை அல்ல, மாறாக சங்க பரிவார அமைப்புகளால் திட்டமிட்டு காவல்துறையினரின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் அனிஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரம் காவல்துறை உதவியோடு திட்டமிட்டு நடத்தப்பட்டதா..?- பாப்புலர் ஃப்ரண்ட்

வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் கிட்டத்தட்ட 20 பேர் ஏற்கனவே உயிர் இழந்துள்ளனர், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்; பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
எந்தவொரு எதிர்பாராத சம்பவத்தாலும் இந்த வன்முறை தூண்டப்படவில்லை. மாறாக சங்பரிவார் குண்டர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலானவை. யாருக்கும் எதிராக ஒரு கல் கூட வீசப்படவில்லை, வெறுப்பு அல்லது வன்முறைக்கான ஒரு வார்த்தையும் யாருக்கு எதிராகவும் உச்சரிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், ஆரம்பத்திலிருந்தே, சங்பரிவார் தலைவர்களும், குழுக்களும் ஷாஹீன் பாக் மற்றும் நகரத்தின் பிற பகுதிகளின் போராட்டங்களில் பங்கேற்கும் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர். ஊமையான பார்வையாளர்களாக காவல்துறை பார்த்துக் கொண்டிருந்தபோது அவர்களைத் தாக்க பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜாஃபிராபாத்தில் நடந்த அமைதியான போராட்டங்களுக்கு எதிரான பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் தூண்டுதல்தான் திட்டமிட்ட வன்முறையைத் தூண்டியது. துப்பாக்கிகள், வாள் மற்றும் இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதம் ஏந்திய நபர்கள் அப்பாவி மக்களை தாக்குவது, கொல்வது,
துன்புறுத்துவது மற்றும் கொள்ளையடிப்பது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டதும் மக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ள காவல்துறை கலவரக்காரர்களுக்கு உதவி செய்வதும் அவர்களோடு சேர்ந்து கொண்டு மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதுமான ஆதாரங்கள் இப்போது வெளிவருகின்றன.
இதற்கிடையில், தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை தாக்குதலை குறித்து மதச்சார்பற்ற கட்சிகள் பேசத் தயங்குவது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் தன்னார்வ குழுக்களை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது. தற்போதைய நிலைமையை சரிசெய்ய மற்றும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சமுதாய தலைவர்களும் முன்முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் டாக்டர் முகமது ஷம்மூன்.