தமிழகத்தில் கொரோனா சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா..? இல்லை என்கிறாரே எடப்பாடி பழனிசாமி ..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் நோய்த் தொற்று சற்று குறைந்தாலும் மற்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.


இதற்கு காரணம் சமூகப் பரவல்தான் என்று பலரும் கூறிவரும் நிலையில், அப்படி எதுவும் இல்லை என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர் கூறியிருப்பது இதுதான். ‘’ நான் ஏற்கனவே பலமுறை சமூகப் பரவல் இல்லை என்று தெரிவித்து விட்டேன். நாமெல்லாம் இப்படி இருக்கின்ற இடத்தில் நோய் பரவினால் தான் சமூகப் பரவல். ஒருவருக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு தொடர்புடையவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்து அவர்களுக்கு பாசிட்டிவ் இருந்தால் சிகிச்சை அளிக்கிறோம். அந்த முறையைத் தான் அரசு கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. 

அரசின் சார்பாக பல மருத்துவ கேம்ப் நடத்தியிருக்கிறோம். அதில், அதிக அளவு மக்களை பரிசோதனை செய்த காரணத்தினால், சுமார் 10,000 நபர்களுக்கு நோய்த் தொற்றின் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறார்கள். பின்னர் பரிசோதனை செய்து பாசிட்டிவ் அல்லது நெகடிவ் என்பது கண்டறியப்படும். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு, சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செயல்பட்டதன் விளைவாக நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டு வருகின்றது. 

சென்னை மக்களுக்கு :வாழ்வாதாரம் என்பது மிகப் பெரிய சவால். ஒரு பக்கம் நோய்ப்பரவலை தடுக்க வேண்டும், அதே வேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அதனால், முழுக்க முழுக்க ஊரடங்கையே பிறப்பித்துக் கொண்டிருந்தால், கிட்டத்தட்ட 105 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதையே தொடர்ந்து கொண்டிருந்தால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு விடும். 

ஆகவேதான், முடிந்த அளவிற்கு ஊரடங்கின் மூலமாக நோய் பரவலைத் தடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமென்ற நிலையில்தான் அரசாங்கம் இந்த முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கின்றது. அதனால் மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.