ஆகஸ்ட் 22ம் தேதி சென்னையின் பிறந்தநாளா? கல்வெட்டு சொல்லும் மாதரசன் பட்டணம் உண்மைகள்!

சென்னையில் 2004ம் ஆண்டுமுதல் ஆகஸ்ட் 22ம் தேதியை சென்னையின் பிறந்த நாளாக கொண்டு ஒருவாரம் வரை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.ஃபிரான்ஸிஸ் டே, ஆர்தர் கோகன் என்கிற பிரிட்டிஷ் ஏஜெண்டுகளுக்கு சென்னையில் தங்கி வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நாள் அது,


அவளவுதான் .அன்றிலிருந்து கணக்கிட்டு சென்னைக்கு 367வது பிறந்தநாள் என்று கொண்டாடுகிறார்கள்.ஆனால்,கிருஷ்ணகிரி மாவட்டம் பொன்னேசுவர மடம் அருகில் கிடைத்துள்ள கல்வெட்டு இதை முற்றிலும் மறுக்கிறது.அந்தக் கல்வெட்டின்படி சென்னைக்கு இன்று வயது651 ஆண்டுகள்!.

ஸ்ரீரங்கத்தையும்,மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும் அரை நூற்றாண்டு காலமாக மூடி வைத்திருந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டவன் குமார கம்பண்ண உடையார்  என்கிற விஜயநகர இளவரசன்.அவனிடம் பிரதானியாக இருந்தவர் சோமையப்ப தண்டநாயகர்.அவரது மகன் தண்டகூளிமாராயன்.

இப்போது கர்நாடகத்தில் இருக்கும் முல்பாகல் பகுதியின் ஆளுனராக இருந்திருக்கிறான்.இந்த கூளி மாராயன் போர் சாதனைகள் குறித்த கல்வெட்டு ஒன்று பொன்னேசுவர மடம் அருகே கண்டுபிடிக்கப் பட்டு இருக்கிறது. பெண்ணையாற்றங்கரையில் உள்ள ஒரு பெரிய பாறையின் சரிவில் இந்தக் கல்வெட்டு பொறிக்கபட்டு உள்ளது.கம்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தில் சகம் 1291, பிலவங்க வருடம் பூர்வபட்சம் ரோகினி நட்சத்திரத்தில் இந்தக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அது கிபி 1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதியாகும்.அதில் ' புதுப்பட்டணம்,மாதரசன் பட்டணம்,நீலாங்கரையான் பட்டணம், மற்றுமுள்ள பல பட்டணங்களும்,கரையும் துறையும் உட்படக்  கொண்டு ராஜாவின் கையிலே காட்டிக் கொடுத்து ' என்று பொறிக்கப்பட்டு உள்ளது .

13 வரியில் இருந்து 17வது வரிவரை உள்ள இந்த வரிகளில் சொல்லப்பட்ட புதுப்பட்டினம்,நீலாங்கரை மதராசன் பட்டினம் எல்லாம் ஆங்கிலேயர் வருவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே , சென்னை வாசிகளே,எதிலும் காசு பார்க்கும் கார்பரேட்களே கொண்டாட்டம் நல்லதுதான்,ஆனால்,அது அர்த்தமில்லாததாக இருக்கக் கூடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.