நாங்குநேரியில் களம் இறங்கிய ஐ.பெரியசாமி! அதிர்ச்சியில் காங்கிரஸ்!

விரைவில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் சூழல் நிலவுகிறது.


விக்கிரவாண்டி தொகுதியில் ஏற்கெனவே தி.மு.க.தான் நின்றது என்பதால், அந்தத் தொகுதியில் மீண்டும் தி.மு.க. நிற்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால், நாங்குநேரி தொகுதியில் கடந்த முறை வசந்தகுமார் நின்றார். அவர் எம்.பி. ஆனதால் அந்தத்தொகுதி காலியானது. அது காங்கிரஸ் தொகுதி என்பதால், காங்கிரஸ் கட்சிக்கே கொடுக்கவேண்டும் என்று பேச்சு நிலவுகிறது.

ஆனால், திருச்சியில் பேசிய உதயநிதி, நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும் என்று ஏற்கெனவே சீட் போட்டுவிட்டார். அதை மேடையில் இருந்து கேட்ட ஸ்டாலினும் அமைதியாக இருந்தார். இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு பிரஸ்டீஜ் விஷயமாக இருந்துவருகிறது.

இந்த நிலையில் இன்று தி.மு.க. சார்பில் ஐ.பெரியசாமி நாங்குநேரி தொகுதிக்குச் சென்று தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தி.மு.க. தேர்தல் நின்று ஜெயிக்க வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்படுகிறார், அதனால் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

மேலும், நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இந்த வாரத்திலேயே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் அறிந்து காங்கிரஸ் கொதித்துப் போயிருக்கிறதாம்.