ஒரே ஒரு முறை இதை செய்ய ரூ.1.5 கோடி! பணத்தை வாரிக் குவிக்கும் விராட் கோலி – பிரியங்கா சோப்ரா!

மும்பை: விராட் கோலி, பிரியங்கா சோப்ரா போன்ற நட்சத்திரங்கள் பதிவு வெளியிட இன்ஸ்டாகிராம் நிறுவனம் பணம் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலகம் முழுக்க பல்வேறு பிரபலங்களுக்கு காசு கொடுத்து அவர்களை இன்ஸ்டாகிராம் நிறுவனம், தனது மார்க்கெட்டிங்கிற்காக பயன்படுத்தி வருகிறது. இதன்படி, விராட் கோலி, பிரியங்கா சோப்ரா ஆகிய 2 பேரும் இன்ஸ்டாகிராமிடம் பணம் பெற்றுக் கொண்டு பதிவிடும் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். 

இதுபற்றி Hopper HQ என்ற நிறுவனம் 2019 இன்ஸ்டாகிராம் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கா டிவி பிரபலம் கைலி ஜென்னர், இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக அதிகம் சம்பாதிக்கும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் ஒரு பதிவுக்கு, ரூ.8.74 கோடி பணம் ஸ்பான்சராக தரப்படுகிறது. கைலி ஜென்னருக்கு 21 வயதுதான் ஆகிறது. இவருக்கு அடுத்தப்படியாக, பாடகர் அரியானா கிராண்டி உள்ளார். அவர் வெளியிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ.6.87 கோடி பணம் தரப்படுகிறது. 

இதேபோல, கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிம் கார்டாஷியன், செலினா கோமஸ், ஹாலிவுட் நடிகர் தி ராக் ட்வைன் ஜான்சன், பியான்ஸ் நோல்ஸ், டெய்லர் ஸ்விஃப்ட், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் டா சில்வா சான்டோஸ் ஜூனியர், கனடாவைச் சேர்ந்த பாடகர் ஜஸ்டின் பீபர், டேவிட் பெக்காம், லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட பலர்  இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 

இப்பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா, 19 வது இடம் பிடித்துள்ளார். 37 வயதாகும் பிரியங்கா சோப்ராவை, இன்ஸ்டாகிராமில், சுமார் 4.30 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இதன்படி, அவர் வெளியிடும் ஒரு பதிவுக்கு, இன்ஸ்டாகிராம் சார்பாக, ரூ.1.87 கோடி பணம்  ஸ்பான்சர் தரப்படுகிறது. இவருக்கு அடுத்தப்படியாக, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியும் இந்த பட்டியலில் 23வது இடம்பிடித்துள்ளார். கோலி வெளியிடும் ஒரு பதிவுக்கு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரூ.1.35 கோடி பணம் ஸ்பான்சராக தருகிறது. 

இப்படி பிரபலங்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடச் செய்வதன் மூலமாக, ஏராளமான பயனாளர்களை ஈர்த்து, அவர்களை இன்ஸ்டாகிராம் பயன்படுத்த வைக்க முடிவதாகவும், இதனால் இன்ஸ்டாகிராமின் வர்த்தகம் உயர்கிறது எனவும் Hopper HQ குறிப்பிட்டுள்ளது. 

இந்த விசயம் தெரியாமல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உண்மை என நம்பி, நம் மக்கள், 'என் ஆளு பெரிசு, உன் ஆளு பெரிசு' எனச் சண்டையிட்டு சட்டை கிழித்துக் கொள்ளாத குறையாக அலைகின்றனர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்...