ரூ.3.4 லட்சம் கோடி! இந்திய அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள கருப்பு பணம்!

டெல்லி: கடந்த 2010ம் ஆண்டு வரை இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிய பணத்தின் மதிப்பு 490 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


இதுபற்றி என்ஐபிஎஃப்பி, என்சிஏஈஆர் மற்றும் என்ஐஎஃப்எம் ஆகிய 3 முன்னணி  இன்ஸ்டிடியூட்கள் கூட்டாக ஆய்வு நடத்தி, முடிவுகளை சமர்பித்துள்ளன. இதில், 2010ம் ஆண்டு வரையிலும் உலகம் முழுக்க இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தின் அளவு 490 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணத்தில் பெருமளவு தொகை பல்வேறு நாடுகளிலும் ரியல் எஸ்டேட், சுரங்கத் துறை, புகையிலை வர்த்தகம், சூதாட்டம், சினிமா மற்றும் கல்வித்துறை ஆகியவற்றில் முதலீட்டின் பேரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த அறிக்கையை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மக்களவையில் சமர்பித்துள்ளது. அரசு சார்ந்த இன்ஸ்டிடியூட்களின் உதவியுடன் ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வமாக இத்தகைய அறிக்கை வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த ஆய்வு, கடந்த 2011ம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தொடங்கி வைக்கப்பட்டதாகும்.

இந்த ஆய்வு முடிவுகள் பொதுவெளியில் தெரிவிக்கப்படாத நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதனை தற்போது மோடி அரசு பகிரங்கப்படுத்தியுள்ளது. இப்படி, 1997 முதல் 2009 வரை வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தி மூலமாக, நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.