20 ஓவர் பெண்கள் உலக கோப்பை! பாகிஸ்தானை தெறிக்கவிட்டு பழி தீர்த்தது இந்தியா!

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கோட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. துவக்கத்திலி விக்கெட்டுகளை வேகமாக சரிய அந்த அணியின் பிஷ்மா மரூப் மற்றும் நிடா டார் மட்டுமே நிலைத்து நின்று ஆடினர். இருவருமே அரை சதம் அடித்த காரணத்தினால் பாகிஸ்தானால் கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. பிஸ்மா 53 ரன்களிலும், நிடா டார் 52 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

  பின்னர் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். துவக்க வீராங்கனை மிதாலி ராஜ் நிதானமாக ஆடினார். ஒரு புறம் விக்கெட்டுகள் விழ மறுபுறம் மிதாலி ராஜ் அரை சதம் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனார். 47 பந்துகளை எதிர்கொண்ட மிதாலி ராஜ் 56 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

  பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 20வது ஓவரில் 3 பந்துகளில் எஞ்சிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்திய பெண்கள் அணி பழிதீர்த்துக் கொண்டது.