ஓடும் ரயிலில் இனி புல்பாடி மசாஜ்! பயணிகளை கிக்காக கவனிக்கும் இந்திய ரயில்வே!

ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மசாஜ் சேவை செய்து தரப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக உள்ள இந்தியன் ரயில்வே , தினசரி 4 கோடி பேருக்கு சேவை அளித்து வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், தற்போது ஓடும் ரயிலில் மசாஜ் சேவை செய்துதர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ரயில்வேயின் வருமானமும் உயரும், அதேசமயம் பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என, கருதப்படுகிறது. முதல்கட்டமாக, மேற்கு ரயில்வே மண்டலத்தின்கீழ் வரும் இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இந்த மசாஜ் சேவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நபர் ஒருவருக்கு தலா ரூ.100 கட்டணத்தில், மசாஜ் செய்து தரப்படும்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை ஓடும் ரயிலில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே, ஒவ்வொரு பெட்டியிலும் 4 முதல் 5 மசாஜ் ஊழியர்கள், உரிய அடையாள அட்டையுடன் பணியமர்த்தப்படுவார்கள் என, குறிப்பிடப்படுகிறது. 

மேற்கு ரயில்வே மண்டலத்தில் மசாஜ் சேவை பெறும் வரவேற்பை பொறுத்து, இந்தியா முழுவதும் இச்சேவை விரிவுபடுத்தப்படலாம், எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.