யாருடா எங்க எம்.பி. மேல கத்தியை எறிஞ்சது? டென்ஷனாகும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

செத்துப்போன கட்சி என்று வருணிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஸ்டாலின் புண்ணியத்தில் எப்படியோ இரண்டு எம்.பி.க்கள் கிடைத்துவிட்டனர்.


இந்த நிலையில் நாகை எம்.பி. எம்.செல்வராசு மீது கத்தி வீசப்படவே கட்சி டென்ஷன் ஆகியுள்ளது. இதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை இது..

எம்.செல்வராசு எம்.பி. மீது தாக்குதல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம்.செல்வராசு மீது நடைபெற்றுள்ள தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு மிகு வன்மையாக கண்டிக்கின்றது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற பிறகு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, தொகுதி முழுவதும் எம்.செல்வராசு சென்று வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் தொகுதியில் நேற்றைய தினம் (20.08.2019) நன்றி தெரிவித்து வந்த நிலையில், வேதாரண்யம் தொகுதி கோடியங்கரை, அகஸ்தியாம் பள்ளி ஆகிய பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் (திமுக) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் மற்றும் தோழமை கட்சி தலைவர்களும், தொண்டர்களும் உடன் சென்றுள்ளனர்.

அகஸ்தியாம் பள்ளி காளியம்மன் கோவில் தெரு பகுதியில் நன்றி தெரிவித்து எம்.செல்வராசு பேசிக் கொண்டிருந்தபோது அவரை நோக்கி கத்தி வீசப்பட்டுள்ளது. வீசப்பட்ட கத்தி அவர் மீது பாயாமல் ஜீப்பில் மோதி விழுந்துள்ளது.

கத்தி வீசியவர் யார்? எதற்காக? இப்படியொரு கொலை வெறி தாக்குதலுக்கு முற்பட்டார், அதற்கான காரணமென்ன? அதன் பின்னணி என்ன? யாருடைய தூண்டுதலுக்கு அந்நபர் இரையானார்? என்பதனை காவல்துறை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

எம்.செல்வராசுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பாளித்திட வேண்டுமென தமிழ்நாடு அரசையும், காவல்துறையினையரையும், மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என்று முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.