இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் பெண்களுக்கு முதல் முறையாக வாய்ப்புத் தர இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஆட்சேர்ப்பு முகாம் செப்டம்பர் 12ம் தேதி லக்னோவில் நடைபெற உள்ளது.
வரலாற்றில் முதல் முறை! ராணுவத்தில் சோல்ஜர்ஸ் பணியிடங்களுக்கு பெண்கள்!

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்இளைப்பில்லை காணென்று கும்மியடி!
என்ற பாரதியார் பாடலை உண்மையாக்கும் வகையில் தற்போது உள்ளூர் ஆட்டோ ஓட்டுவது முதல் ராக்கெட்டில் செல்வது வரை பெண்கள் பல நிலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆண்களுக்கு சவாலாக உள்ளனர்
இந்திய ராணுவத்தில் கப்பற் படை மற்றும் விமானப் படையில் சுமார் 13.09 சதவீத பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அதே சமயம் சிப்பாய் பிரிவை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பெண்களையும் அப்பணிக்கு தேர்வு செய்து அவர்களுக்கென சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்து தர இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. அதன் வெளிப்பாடுதன் ராணுவத்தில் பெண்களுக்கும் சிப்பாய் பிரிவில் பணி. இந்த அறிவிப்பு ராணுவத்தில் சேர்ந்து சாதிக்கத் துடிக்கும் பாரதி கண்ட பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
முதற்கட்டமாக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்களை நேரடி ஆட்சேர்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்து பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முகாம் செப்டம்பர் 12 முதல் 20ம் தேதி வரை லக்னோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
மேலும் சுமார் 5,000 பெண்கள் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேரடி முகாம் என்பதால் பெண்கள் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தில் அனைத்து விவரங்களும் இருப்பதாகவும் நேர்முகத் தேர்வில் ஊக்க மருந்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னெச்சரிக்கையாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிப்பாய் எனும் சொல் பாரசீக மொழியாகும். அதவாது தமிழில் போர் வீரன் என்று அர்த்தம். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவின் உள்ளூர் போர் வீரர்களை சிப்பாய் என அழைப்பார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போதும் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய இராணுவ மட்டத்தில் சிப்பாய் எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. 1806 மற்றும் 1857ல் நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிப்பாய்கள் பங்கு அதிக அளவில் இருந்தது.