பும்ரா போட்ட ஸ்கெட்ச்! ரோஹித் - சஹல் இணைந்து செய்த சம்பவம்! தெ.ஆ., கதம் கதம்!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசி தென்னாபிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான ஆம்லா மற்றும் டி காக் ஆகியோரின் விக்கெட்களை வந்த வேகத்தில் வீழ்த்தினார்.  பின்னர் இணைந்த தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வான் டெர் டுசென் நிதானமாக ஆடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டனர்.பின்னர் சூழலில் அசத்திய சஹால் இவர்கள் இருவரின் விக்கெட்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் இறங்கிய மோரிஸ், பெலுகுவாயா, ரபடா சற்று நிதானமாக ஆடி தென்னாபிரிக்கா அணி 227 ரன்களை எடுக்க உதவினர். கிறிஸ் மோரிஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் சார்பாக சஹால் 4 விக்கெட்களையும், பும்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் வந்த வேகத்தில் வெளியேற, பின்னர் கோஹ்லியும், ரோஹித் ஷர்மாவும் இணைந்தனர். கோஹ்லி 18 ரன்களுக்கு வெளியேற, லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மாவுடன் இணைந்தார். லோகேஷ் ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தோனி, ரோஹித் ஷர்மாவுடன் இனைந்து  சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 122 ரன்களை விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.  தோனி  34 ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.