இந்தியா ஹாட்ரிக் வெற்றி: தொடரையும் வென்று அசத்தல்!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.


இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று காலை தொடங்கியது. இந்திய அணியில் காயம் காரணமாக டோனி இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். விஜய் ஷங்கருக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியா அணியில் இடம் பெற்றார்.

டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்களை எடுத்தது .அதிகபட்சமாக ரோஸ் டெய்லர்93 ரன்களும் , லதாம் 51 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும், புவனேஸ்வர், சஹால், ஹர்டிக் பாண்டியா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 43 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு இலக்கை எளிதாக எட்டியது. ரோஹித் சர்மா 62 ரன்களும், விராட் கோஹ்லி 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ராயுடு அவுட் ஆகாமல் 40 ரன்களும் தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் 38 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றிய ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.