சீனாவை இந்தியாவுக்கு அழைத்து ராஜ உபசாரம் செய்தார் மோடி! ஆனாலும் மோதுகிறது சீனா.. அதன் ராஜதந்திரம் என்ன?

கொரோனாவை பரப்பியது என்ற வகையில், இன்று உலகம் முழுவதும் சீனாவின் மீது கொலைவெறியுடன் இருந்து வருகிறது.


இந்த நேரத்தில் துப்பாக்கி சண்டை போடாமல் கற்களாலும், கைகளாலும் தாக்கி 20 வீரர்களை கொலை செய்திருக்கிறது சீனா. அந்த நாட்டின் படையினருக்கும் பெரும் இழப்பு என்று சொல்லப்பட்டு வந்தாலும், இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

உலகம் முழுவதும் சீனாவை தூற்றும் நேரத்தில், போருக்கு எப்படி துணிகிறது என்பதற்கு பின்னே பல்வேறு கேள்விகள் இருக்கிறது. அதே நேரம் நாம் போருக்கு தயார் இல்லை, சமாதானம் பேசலாம் என்றும் அறிவிக்கிறது சீனா.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டில் ஆட்டுவது போன்ற நடவடிக்கையை நம்பி இந்தியா ஏமாந்துவிடக் கூடாது. இந்த தாக்குதலை பயன்படுத்தி சீனாவை, உலக நாடுகளிடம் இருந்து தனிமைபடுத்தும் முயற்சியை இந்தியா உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

சீனாவின் பொருட்களை வாங்காமல் புறக்கணிப்பது, சீனாவின் முதலீடுகளை மறுதலிப்பது போன்றவை இப்போது தேவையான விஷயங்கள் அல்ல. ஏனென்றால், போர் வந்தால் பாதிக்கப்படுவது இரண்டு நாடுகளும்தான். குறிப்பாக சீனாவை விட இந்தியாவையே அதிகம் பாதிக்கும். ஏனென்றால், சீனாவை விட இந்தியாதான் நீண்ட காலமாக பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

மேலும் இப்போது அமெரிக்கா அடக்கி வாசிப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. பிரச்னைகளை மத்தியஸ்தம் செய்துவைக்க தயார் என்று சொன்ன அமெரிக்கா, இதுவரை இந்தியாவுக்கு அல்லது சீனாவுக்கு ஆதரவாக பேசவே இல்லை. நேபாளம் இப்போது நம்முடன் மோதிக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் கண் சிவந்துகொண்டு இருக்கிறது.

ஆனால், சீனாவை நண்பராக பாவித்து இந்தியாவுக்கு அழைத்து ராஜ உபசாரம் செய்தது மோடி மட்டும்தான். அதிகாரபூர்வமற்ற வகையில் பேச்சுவார்த்தையும் நடத்தினார்கள். இத்தனைக்கும் பிறகும் சீனா மோதுகிறது என்றால், அதன் ராஜதந்திரத்தை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.