மோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டது..!

பிரதமர் மோடி அறிவித்த லாக் டவுன் அமோக வெற்றி என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. கொரோனாவை வெல்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து ஊரடங்கை அறிவித்தார் மோடி.


நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள் முடங்கினால், கொரோனா பரவுவது நின்றுவிடும் என்று அவர் நம்பினார். இதனை வெற்றி என்று அறிவிப்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை என்று கூறுகிறார் பிரபல பத்திரிகையாளரான கதிர்வேல். 

கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளது பெரும்பாலான இடங்களில். கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறது. மரணம் அதிகமாகி இருக்கிறது.

லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவை இல்லை.

அதற்காக மோடியை திட்டுவதற்கு முகாந்திரம் இல்லை. மார்ச் மாத மத்தியில் அவர் மனதுக்கு எது சரி என்று பட்டதோ அதை செய்தார். தானாக அந்த கருத்தை அவர் எட்டவில்லை. ஆலோசனை சொல்வதற்காக அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் கூறியதை ஆராய்ந்து மோடி எடுத்த முடிவு நாடு தழுவிய ஊரடங்கு.

ஆலோசகர்களையும் விமர்சிக்க வழி இல்லை. அதுவரை கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர்கள் சொன்ன ஆலோச்னை அது. புள்ளி விவரங்களையும் வரை படங்களையும் குறை சொல்லி பிரயோசனம் கிடையாது. அவை இல்லாமல் எந்த அரசாங்கமும் முடிவு எடுப்பது இல்லை இப்போது.

வரிசையாக செய்யப்படும் பரிசோதனை முடிவுகளை பார்க்காமல் இன்று எந்த டாக்டரும் நோயை தீர்மானிப்பது இல்லை; சிகிச்சையை முடிவு செய்வதும் இல்லை. நோயாளியை பார்த்து, கேள்விகள் கேட்டு, நாடி பிடித்து, நோயை கண்டு பிடித்து மருந்து எழுதி கொடுக்கும் வழக்கம் மலையேறி விட்டது.

ஆட்சி நடத்துபவர்களும் அந்த பாதைக்கு திரும்பி பல காலம் ஆகிவிட்டது. மக்களை பார்த்து, அவர்களின் அனுபவங்களை கேட்டு, அந்தந்த துறையின் வல்லுனர்களுடன் கலந்து பேசி, திட்டங்களை தயாரிக்கும் நடைமுறைக்கு விடை கொடுத்தாகி விட்டது. பரிசோதனைகளை நிறுத்தி விட்டால் யாருக்கு பாதிப்பு என்பதை சொல்ல தேவை இல்லை. புள்ளி விவரங்களையும் வரை படங்களையும் நிராகரித்தால் யாருக்கு இழப்பு என்பதையும் வெளிச்சம் போட தேவை இல்லை.

ஆட்டொமேஷன் என்ற பெயரால் மனிதனை மனிதன் முகம் பார்த்து பேசுவதற்கான அன்றாட சந்தர்ப்பங்களை முற்றிலுமாக அழித்து விட்டோம். குடும்ப உறவுகள், நட்புகள் அளவுக்கு சுருங்கிப்போன சந்தர்ப்பங்களையும் ஸ்மார்ட்ஃபோன் உதவியுடன் ஒழித்து கட்டினோம்.

உயிர் அற்ற எண்களையும் எழுத்துகளையும் கோடுகளையும் அடித்தளமாக கொண்டு எழுப்பும் கட்டடங்களால் மனித வாழ்வை உறுதி செய்ய ஒருபோதும் இயலாது. 

நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும் அந்த புள்ளிகள் காட்டும் வழி சரியானதாக இருக்க சாத்தியங்கள் இல்லை. பண மதிப்பிழப்பு தொடங்கி வரிசையாக பார்த்து கொண்டு இருக்கிறோம். 

உயிரை கொடுத்து ஊருக்கு திரும்பிய தொழிலாளர் கூட்டம் பட்டினி கிடந்தால் தானாக வேலைக்கு திரும்பி வரும் என்ற வாதம் அபத்தமானது. நம்பிக்கை சிதைக்கப்பட்ட மனங்கள் அத்தனை சுலபமான தீர்வுகளை எட்டுவது இல்லை.

மனிதர்களை வாசிப்பதை காட்டிலும் மாற்று வழிகள் எதுவும் பலன் தராது தலைவனுக்கு. 

தேவை ஸ்க்ரீன் டச் அல்ல. ஹ்யூமன் டச் என்கிறார் கதிர்வேல்.