மோடி வெற்றி எதிரொலி! காவி நிறத்துக்கு மாறும் இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நீல நிறம் மற்றும் காவி நிற சீருடை அணிந்து விளையாடும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியுடன் ஜூன் 5 ம் தேதி மோதுகிறது. 

இந்தியா, இலங்கை , இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பொதுவாக நீல நிற சீருடையில்  தான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடும். ICC இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் விளையாடும் இரு அணிகளும் ஒரே நிற சீருடையை பயன்படுத்தகூடாது என அதிரடியாக கூறியுள்ளது. மேலும் இரு அணிகளும் ஒரே நிற சீருடையை கொண்ட அணிகளாக  இருக்குமேயானால், ஏதாவது ஒரு அணி தங்களது இரண்டாவது சீருடையை அணிந்து எதிரனியுடன் மோத வேண்டும் எனவும் ICC அறிவித்துள்ளது.

இதனால் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் காவி நிற சீருடை அணிந்து விளையாடும் என தெரிகிறது. இதே போல பாக்கிஸ்தான், தென்னாபிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் பச்சை நிற சீருடைகள் அணிந்து விளையாடி வருகின்றன.

ஆகையால் இந்த அணிகளும் இரண்டாவது சீருடை அணிந்து சில போட்டிகளில் விளையாட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளின் சீருடை  மட்டும் வேறு எந்த அணிகளின் சீருடைகளுடன் ஒத்து போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் உலகக்கோப்பை போட்டியில் பல்வேறு அணிகளும் இரு விதமான சீருடை அணிந்து கலக்க போகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் மோடி வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய அணி காவி உடைக்கு மாறி உள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.