அபிநந்தனை விடுவித்த இம்ரான் கானுக்கு நோபல் பரிசு! வலுக்கும் கோரிக்கை

‘’நோபல் அமைதிப் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை,’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.


இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதில், எந்நேரமும் இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பொறுமையான நடவடிக்கை பலராலும் பாராட்டப்படுகிறது.  
 
குறிப்பாக, பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப் படை கமாண்டர் அபிநந்தனை உயிருடன் விடுவிக்க இம்ரான் நடவடிக்கை எடுத்தார். இதனால், இந்திய மக்களும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தியா பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கும் முன்பே அபிநந்தனை அவர் விடுவித்தார்.

இந்நிலையில், இம்ரான் மற்றும் அவரது அரசுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, சமூக ஊடகங்களில், இம்ரானின் ஆதரவாளர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்நாட்டு அமைச்சர் ஒருவர் கூட இம்ரான் கானுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று வலியுறத்தியுள்ளார்.

இந்த பதிவுகளுக்கு மறுப்பு கூறியுள்ள இம்ரான் கான், ‘’நோபல் பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை,’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீர் மக்களின் விருப்பப்படி, அவர்களின் நீண்ட நாள் பிரச்னையை தீர்ப்பவரே, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியானவர் என்றும் இம்ரான் தெரிவித்துள்ளார்.

எனவே யாருக்கு நோபல் பரிசு என்பதை காஷ்மீர் மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். காஷ்மீர் பிரச்சனை தீர்ப்பவருக்கு தான் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று இம்ரான் கூறியுள்ளார்.