சேலத்திற்கு குடிபெயர்ந்த முக்கிய அதிகாரிகள்! முதல்வர் மாமனாருக்கு அஞ்சலி!

தீபாவளி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் மரணம் அடைந்தது, சேலம் அ.தி.மு.க.வினருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனென்றால், அவர்தான் அத்தனை நிர்வாகிகளுக்கும் தேவையானதை கவனித்து வந்தாராம்.


எதிர்பாராத மரணத்தால் முதல்வர் பழனிசாமி மனம் உடைந்துவிட்டாராம். அவருக்கு ஆறுதல் சொல்வதற்கு அனைத்து அமைச்சர்களும் கிளம்ப முற்பட்ட நேரத்தில், சுஜித் விவகாரத்தில் அக்கறை செலுத்தினால் போதும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், சென்னையில் இருந்து தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆகிய மூவரும் நேற்று சேலத்துக்குச் சென்று முதல்வர் மாமனாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு முதல்வரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.

செவ்வாய் கிழமை சென்னையில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து சண்முகத்திடமும் திரிபாதியிடமும் ஏற்கெனவே கூறியிருந்தாராம் முதல்வர். அதனால்தான் இருவரும் ஒன்றாக சென்று சந்தித்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசிய முதல்வர், ‘இப்போதைக்கு அந்த விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்கவேண்டாம்‘ என்று அனுப்பிவிட்டாராம்.

மேலும் மாமனார் மறைவு குறித்து அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது என்று லோக்கல் கட்சியினரிடமும் எச்சரிக்கை செய்திருக்கிறாராம் எடப்பாடியார்.