காஞ்சி கலெக்டரை உடனே தூக்குங்க! சீமான் ஆவேசம்! போலீசுக்கு ஆதரவாக பேசிய முதல் தலைவன்!

அறிக்கை: அத்திவரதர் கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியை ஒருமையில் பேசி மிரட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி.


அத்திவரதர் வழிபாட்டுக்கு வந்த மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசி மிரட்டியிருக்கிற காணொளி பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

அத்திவரதர் வழிபாட்டுக்கு வரும் மக்களை நெறிப்படுத்திக் வழிகாட்டுவதும், வருகிறவர்களைச் சோதனையிட்டுப் பாதுகாப்பினை உறுதி செய்வதுமெனத் தனக்கு அளிக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் பேசித் திட்டுவதும், எவ்விதத் தவறும் இழைக்காத அக்காவல்துறை அதிகாரியை இடைநீக்கம் செய்வேன் என மிரட்டுவதுமானப்போக்கு வன்மையாகக் கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு என ஏராளமான பணிச்சுமைகளைக் கொண்டிருக்கும் காவல்துறையினர் கூடுதல் பொறுப்பாகவே இத்தகையக் காவல்பணியில் ஈடுபடுகின்றனர். அத்தகையவர்களை மிக மோசமாக நடத்திப் பொதுமக்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல!

காவல்துறையினர் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்க முடியாவண்ணம் எந்தளவுக்கு அதிகார அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே மிகச் சிறந்தச் சான்றாகும். இத்தகைய அதிகார வரம்பு மீறல்களையும், பழிவாங்குதல் நடவடிக்கைகளையும் உடனடியாகக் களைய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

மண்ணின் நலனுக்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறையினரைப் பணிசெய்ய விடாது தடுத்ததாகக் கூறி பொய் வழக்குத் தொடுக்கும் தமிழக அரசு, காவல்துறையினருக்கு எதிரானக் காஞ்சி மாவட்ட ஆட்சியரின் இச்செயலை

அனுமதிப்பது மிக மோசமான நிர்வாகச் சீர்கேட்டுக்கே வழிவகுக்கும். ஆகவே, காவல்துறையினரை மிரட்டிப் பணிசெய்ய விடாது தடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருஙகிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி.