இளவரசன் தற்கொலை உண்மை தான்! அப்போ தூத்துக்குடி! அதிர வைக்கும் அறிக்கை!

தமிழகத்தை உலுக்கிய மரணம் இளவரசனுடையது. ரயில்வே தண்டவாளத்தில் செத்துக்கிடந்த இளைஞர் இளவசரனின் மரணம் தற்கொலைதான் என்று நீதிபதி சிங்காரவேலு ஆணையம் அறிக்கை அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் இளவரசன், அப்பகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார். இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்துகொண்டார். அதனால், இரண்டு சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. பட்டியலின மக்கள் வசித்துவந்த மூன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தனது தாயுடன் செல்ல விரும்புவதாகக் கூறினார் திவ்யா.

அதன்படி திவ்யா தனது வீட்டுக்குச் சென்ற அடுத்த நாள் இளவரசன் மரணம் நடந்தது. 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதியன்று  ரயில்வே தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இளவரசனின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். இந்த ஆணையம் இளவரசன் மரணம் குறித்துப் பலரிடம் விசாரணை செய்து அறிக்கை தயார் செய்தது.

இந்த ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டாலும், இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்த சூழலில் ஒரு பத்திரிகையில் ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி மனைவி திவ்யா பிரிந்து சென்ற விரக்தியில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டது எனது விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று நீதிபதி சிங்காரவேலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் இளவரசனின் உடலை இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்தனர். அவர்களது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், தடயவியல் சோதனைத் தரவுகள், இளவரசன் எழுதிய கடிதம் இவற்றை ஆதாரமாகக்கொண்டு ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் ரயிலிலிருந்து இளவரசன் கீழே விழுந்து மரணமடைந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அவரது உடலில் வேறெந்த வகையிலும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சமூக ஆர்வலர்கள் இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி ஆகிறார்கள். இப்படி ஒரு அறிக்கை வந்திருப்பது உண்மையா என்று தெரியவில்லை. இனி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும், போராட்டக்காரர்கள் தானே முன்வந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்கள் என்று அறிக்கை வந்தாலும் வரும் என்று கோபமாகிறார்கள்.