20 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் இத்தனை அதிகார வர்க்கமும், அரசாங்கமும், அதிநவீன தொழில்நுட்பங்களும் மயங்கிநிற்கின்றன.
இன்று சுர்ஜித்துக்கு நடந்தது நாளை இடிந்தகரை மக்களுக்கு நடந்தால்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

இதுபோன்ற ஒரு விபத்து நாளை இடிந்தகரையிலோ அல்லது மீத்தேன் ஆலையிலோ நடந்தால் என்னவாகும் என்று கேள்வி எழுப்புகிறார் ராஜசங்கீதன். இதோ, அவரது பதவி. நாசகார திட்டங்களை தமிழகத்தில் மறுப்பதற்கான முக்கியக் காரணங்களை சுர்ஜித்தை மீட்க நடக்கும் முயற்சிகள் தெளிவாக காட்டுகின்றன.
ஓர் இக்கட்டான சூழலில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முடிவு செய்வதற்கே அதனளவில் ஒரு அறிவியல் பார்வை வேண்டும். விளைவு தெரியாமலும் ஆராயாமலும் முயன்று பார்த்து, அதில் சுர்ஜித் பல அடிகள் கீழிறங்கி, மேலே மண் விழுந்து, அதற்கு பின் இன்னொரு முயற்சியை ஆராயாமலே முயன்று... இதெல்லாம் என்ன?
'எல்லாம் நல்லபடியா நடக்கும்' என நம்பிக்கையின் பேரில் செய்யக்கூடிய விஷயமா இது? சுர்ஜித்தை போல் இடிந்தகரை மக்கள் சிக்கினால் இந்த அரசு என்ன செய்யும்? மீத்தேன் கிணறுகள் தஞ்சாவூர் மக்களை பாதித்தால் இவர்கள் என்ன செய்வார்கள்? அதிகபட்சம் போனால் தூத்துக்குடி போல் சுட்டுக் கொள்வார்கள்.
நாங்கள் கேட்கும் அறிவியல் ஆழ்துளைகளுக்கும் மலக்குழிகளுக்கும். அதற்கே நம் அரசுகளின் லட்சணம் பல்லிளிக்கிறது. ஆனாலும் திட்டங்கள் என கொண்டு வருகையில் பேசும் அறிவியலை மட்டும் பாருங்கள். வாயிலிருந்து வளர்ச்சி வரை கிழியும்.
மலையை குடைவோம். சரி. அதன் பின்னான விளைவு? தெரியாது! அதானிக்கு துறைமுகம் கொடுப்போம். சரி. அதன் பின்னான விளைவு? தெரியாது! ஹைட்ரோகார்பன் எடுக்க ஆழம் வரை பாறைகளை உடைத்து ஊடுருவுவோம். சரி. அதன் பின்னான விளைவு? தெரியாது.
இங்கு இருக்கும் அரசு, அரசமைப்பு, அரசியல்வாதிகள் என எல்லாரிடமும் எல்லா மட்டங்களிலும் இருக்கும் அறிவியல் இவ்வளவு மட்டும்தான். மொத்தமாக அறிவியலை வேண்டாம் என சொல்லவில்லை. விளைவுகள் தெரியாத அறிவியலையே வேண்டாம் என்கிறோம். தேவையான அறிவியல் நிச்சயம் தேவை.
தேவையான அறிவியலே மக்களுக்கான அறிவியல். மற்ற எல்லாமும் லாபவெறிக்கான அறிவியல் மட்டுமே என்று கூறியிருக்கிறார் ராஜசங்கீதன்.