சென்னை: ''ஒருகாலத்தில் ரூட் தல எனும் கெத்தில் சுற்றி திரிந்த நான் தற்போது தண்ணீர் கேன் போட்டு பொழப்ப நடத்தறேன்,'' என்று இளைஞர் ஒருவர் குலுங்கி அழும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
காலேஜ்ல மாசா இருந்தேன்! இப்போ தண்ணி கேன் போட்டு வாழ்க்கையை ஓட்டுறேன்! கதறும் முன்னாள் ரூட் தல! வைரல் வீடியோ!

சென்னையில் காலேஜ் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி ரூட் தல விவகாரம் தொடர்பாக, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போலீசார் புதிய பிரசாரம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, முன்னாள் ரூட் தலைகளை பிடித்து, அவர்களின் தற்போதைய நிலை பற்றி, அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து, அதனை வீடியோ எடுத்து போலீசார் வெளியிட தொடங்கியுள்ளனர்.
இதில், தற்போது ஒரு இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் பேசும் இளைஞர், ''2011-2014 காலக்கட்டத்தில் பச்சையப்பன் காலேஜ்ல படிச்சேன். அம்பத்துர் - மந்தைவெளி வழியில் செல்லும் 41டி பஸ்சில் நான்தான் ரூட் தலயாக இருந்தேன். அந்த 3 வருசமும் என்னை பெரிய ஹீரோ போல சித்தரித்தனர்.
நானும் அந்த கெத்துலயே சுற்றி திரிந்தேன். எப்போதும் சக மாணவர்களுடன் சண்டை போடுவது, கண்டக்டர், டிரைவரை மதிக்காமல் பேருந்தில் பாட்டு பாடுவது, மாஸ் காட்டுவதற்காக, பிரசிடென்சி மற்றும் நந்தனம் காலேஜ் மாணவர்களை அடித்து உதைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தேன்.
அப்போது என்னுடைய பெற்றோரும், பேராசிரியர்களும் சொன்ன அறிவுரையை நான் கேட்கல. இதனால், என் மேல 3 போலீஸ் கேஸ் வந்தது. அதற்காக கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். ரூட் தலயாக இருந்தபோது என்கூட இருந்த யாரும், நான் சிறை சென்றபோது என்னை பார்க்க வரல. என் அம்மா மட்டும்தான் ஆதரவா இருந்தாங்க.
அதன் பிறகுதான் எனக்கு விவரம் புரிந்தது. வெளியே வந்தாலும் என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் இன்னும் விசாரணை முடியவில்லை. போலீஸ் வேலைக்குப் போக எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், குற்றப் பின்னணி உள்ள காரணத்தால் போலீஸ் வேலை கிடைக்கல. இப்போது நான் தண்ணீர் கேன் போட்டு பொழப்பு நடத்திட்டு இருக்கேன்.
ரூட் தலயாக இருந்தபோது எப்பவும் என்னைச் சுற்றி மாணவர்கள் கூட்டமா இருக்கும். ஆனா, போலீஸ் கேஸ்ல சிக்கினதும் என்னை யாருமே கண்டுக்கல. இப்ப நான் தனியாளா நிக்குறேன். ரூட் தலயாக இருப்பவர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடம்,'' என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.