கதறும் திமுக தலைமை! மிரளும் தொண்டர்கள்! காரணம் ஒரே ஒரு நபர்! யார் இந்த மாரிதாஸ்?

மாரிதாஸ் எனும் ஒரே ஒரு நபரால் திமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை அக்கட்சியினர் கடந்த இரண்டு நாட்களாக தூக்கத்தை தொலைத்துவிட்டு சுற்றி வருகின்றனர்.


ட்விட்டரில் இன்று காலை முதல் ஐ சப்போர்ட் மாரிதாஸ் எனும் ஹேஸ்டேக்கும் மென்டல் மாரிதாஸ் எனும் ஹேஸ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இதில் ஐ சப்போர்ட் மாரிதாஸ் எனும் ஹேஸ்டேக்கை பாஜக ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மென்டல் மாரிதாஸ் எனும் ஹேஸ்டேக்கை திமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மெண்டல் ஹேஸ்டேக் என்பதை விட ஐ சப்போர்ட் மாரிதாஸ் தான் டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக உள்ளது.

இப்படி மாரிதாஸ் திடீரென ட்விட்டரில் டிரெண்டாக அவர் வெளியிட்ட யூட்யூப் வீடியோ ஒன்று தான் காரணம். அண்மையில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சென்று ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.

ஸ்டாலின் நடத்திய இந்த போராட்டம் இந்தியாவிற்கு எதிரானது என்றும் திமுக ஒரு தேச துரோக கட்சி என்றும் கூறி மாரிதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் திமுகவிற்கு பாகிஸ்தானுடன் தடை உள்ளதால் திமுகவை தடை செய்ய வேண்டும் என்றும் ஒரு வீடியோவை பதிவேற்றினார் மாரிதாஸ்.

இந்த இரண்டு வீடியோக்கள் பேஸ்புக், யூட்யூப் மற்றும் ட்விட்டரில் டிரெண்டாகின. மேலும் திமுக இந்திய தேசத்திற்கு எதிரான ஒரு கட்சி என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கின. சொல்லப்போனால் மிகவும் மொக்கையாகவே சில கருத்துகளை மாரிதாஸ் கூறியிருந்தார்.

வீடியோவில் மாரிதாஸ் கூறிய சில கருத்துகளில் தெளிவு இல்லை. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு மாரிதாஸ் கூறிய சில கருத்துகள் உண்மையில் அபத்தமாகவும் ஏனோ தானோ என்றும் இருந்தன. ஆனால் திமுகவிற்கு எதிரானது என்பதால் எளிதாக டிரெண்டானது.

இதனால் கடும் கோபம் அடைந்த திமுக தலைமை மாரிதாஸ்க்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தது. அந்த புகாருக்கு உண்மையில் சட்டப்படி எந்த வேல்யூவும் இல்லை. ஏனென்றால் மாரிதாஸ் கூறிய கருத்துகள் பேச்சுரிமையின் கீழ் வந்துவிடும்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தத திமுகவினர் மாரிதாஸ் குறித்து தனிமனித தாக்குதல்களை தொடுத்துள்ளனர். மெண்டல் மாரிதாஸ் என்று ட்விட்டரில் டிரெண்டு செய்வதாக நினைத்து மாரிதாசுக்கு இலவச விளம்பரம் செய்து வருகின்றனர்.

போதாக்குறைக்கு மாரிதாசுக்கு எதிரான செய்திகளை கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியுள்ளனர். மேலும் மாரிதாஸ் யாருடனோ பேரம் பேசுவது போன்ற போட்டோஷாப் இமேஜ்களையும் பரப்பி வருகின்றனர்.

இந்த அளவிற்கு திமுகவினரை கொதிக்க வைத்ததோடு அவர்களின் தூக்கத்தை கலைத்த மாரிதாஸ் ஒரு பேராசிரியர். இவர் மதுரை கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். சமூக வலைதளங்களில் பல வருடங்களாக இயங்கி வரும் இவர் தீவிர மோடி ஆதரவாளர்.

தமிழகத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். பெரிய அரசியல் ஞானி போல் பேசினாலும் அவரது பேச்சில் பாமரத்தனம் பளீச்சிடும். இதனால் தான் இவர் எளிதாக இளைஞர்கள் மத்தியில் ரீச் ஆகிறார்.

சீமான், திருமாவளவன், ஸ்டாலின், வீரமணி போன்றோருக்கு எதிரான கருத்துகளை வலுவாக எடுத்து வைக்க கூடியவர். பலரும் டிவி விவாதங்களில் பங்கேற்குமாறு அழைத்தும் செல்ல மறுப்பவர் மாரிதாஸ். இதற்கான காரணம் என்று அவர் கூறுவது தமிழக ஊடக உலகம் முழுக்க முழுக்க திராவிட மற்றும் கம்யுனிச சிந்தனை கொண்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது தான்.

ரஜினிக்கு ஆதரவாக கம்பு சுத்தக் கூடியவர். இதனால் சீமான் ஆதரவாளர்களால் விமர்சனத்திற்கு ஆளானவர். மோடியை தீவிரமாக ஆதரிக்க கூடியவர் என்பதால் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவின் ஆதரவு கிடைக்கப்பெற்றவர்.