உதயகுமாரை சீண்டும் ஐ.பெரியசாமி! ஏம்ப்பா தி.மு.க.வில் வேற யாரும் ஆள் சிக்கலையா? சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு ஏன் மாறியது?

பாரத் நெட் திட்ட டெண்டரில் முறைகேடு எனக் கூறுவது ஆதாரமில்லாத பொய்க் குற்றச்சாட்டு என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது பாய்ந்திருந்தார்.


இந்த நிலையில் உதயகுமாருக்கு பதில் சொல்ல வந்திருக்கிறார் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி. “பாரத் நெட் திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்று ஒரு “பச்சைப் பொய்யை”- அமைச்சர் கூறியிருப்பது- அவரும் இந்த ஒட்டுமொத்த “டெண்டர் திருவிளையாடல்களில்” ஆக்கபூர்வமான பங்குதாரராக இருக்கிறார் என்பது தெரிய வந்து விட்டது.

இத்திட்டத்திற்கு நான்கு “பேக்கேஜ்களாக” ஆன்லைன் டெண்டர் 5.12.2019 அன்றே கோரப்பட்டு -அதை சமர்ப்பிக்கும் கடைசி தேதி ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. 22.1.2020 அன்று அந்த டெண்டர் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு- அந்த தேதியும் முடிந்து விட்டது. பிறகு எப்படி அமைச்சர் இப்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று புதிய “கப்சா” ஒன்றை - கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் எப்படிச் சொல்கிறார்?

டென்டருக்கு இறுதி தேதிக்குப் பிறகு தகவல் தொழில் நுட்பச் செயலாளர் திரு சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். “விருப்ப ஓய்வில்” சென்றதாகச் செய்திகள் வெளிவந்தது ஏன்? 27.1.2020 அன்று அவரும், தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனுக்கு நிர்வாக இயக்குநராக இருந்த திரு எம்.எஸ். சண்முகம் ஐ.ஏ.எஸ்-ஸும் திடீரென்று “டம்மி” பதவிகளுக்கு பழிவாங்கும் நோக்கில் தூக்கியடிக்கப்பட்டது ஏன்?   

அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லாத திரு உதயகுமார் எங்கள் தலைவரைப் பார்த்து “பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்” என்று வசைபாடுவது அரை வேக்காட்டுத் தனமானது. துறை அமைச்சர் என்ற தகுதியைக் கூட துறந்து விட்டு அவர் தவிப்பதைக் காட்டுகிறது! 

பாரத் நெட் திட்ட டெண்டரில் இவ்வளவு அசிங்கமான கூத்துகளையும் அடித்து விட்டு- தனது துறைச் செயலாளர், நிர்வாக இயக்குநர் எல்லோரையும் சதித் திட்டமிட்டு மாற்றி விட்டு ஒன்றுமே நடக்காதது போல் அமைச்சர் கூறலாம். ஆனால் கோப்புகள் உண்மையை இப்போது மட்டுமல்ல- எப்போதும் பேசும் என்பதை திரு உதயகுமார் மனதில் நிலை நிறுத்திக் கொள்வது நல்லது.

தன் கட்சியின் தலைவர்களான மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி “எடப்பாடி எட்டாவது அதிசயம்” என்று புகழ்ந்த திரு உதயகுமாரிடமிருந்து இது போன்ற “பொய் அறிக்கையை” எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் எங்கள் கழகத் தலைவரை விமர்சிப்பதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.