காளியாத்தா.. காளியாத்தா.. என்ன மன்னிச்சிடு..! வழிபாடு நடத்திவிட்டு அம்மன் கிரீடத்தை ஆட்டைய போட்ட திருடன்! அதிர்ச்சி சிசிடிவி!

ஐதராபாத்: திருட வந்த இடத்தில் சாமி சிலையை வணங்கிய திருடன் சிசிடிவி கேமிரா மூலமாக பிடிபட்டான்.


ஆந்திர மாநிலம் செகுந்தராபாத் பகுதியில் கன்ஃபவுண்டரி எனும் இடத்தில் துர்கா தேவி கோயில்  ஒன்று உள்ளது. இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள துர்கா தேவியின் கிரீடம் சமீபத்தில் காணாமல் போனது. இதன்பேரில் போலீசார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோயிலில் பதிவான சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்வையிட்ட போலீசாருக்கு ஒரு உண்மை விளங்கியது.  

ஆம், சிசிடிவி காட்சிகளின்படி, ஒரு நபர் மிகவும் பயபக்தியாக கருவறைக்குள் நுழைந்து, துர்கா தேவியை தொட்டு வணங்குகிறார். பிறகு, மந்திரங்களை ஜெபிக்கிறார். பிறகு, அப்படியே லாவகமாக அம்மன் தலையில் உள்ள கிரீடத்தை கழட்டுகிறார். ஆனால், கிரீடம் சிலையின் கழுத்தில் ஒரு சரடு மூலமாக இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. உடனடியாக, அதை கவனித்த திருடன் மீண்டும் கீழே இறங்கி அம்மனின் காலை தொட்டு வணங்குகிறார்.

பிறகு, கழுத்தில் உள்ள சரடை அவிழ்த்து, கிரீடத்தை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியேறுகிறார். இதன்பேரில் போலீசாரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர். திருட வந்த இடத்தில் முகத்தை மூடிக் கொண்டு செயல்படும் திருடர்களுக்கு மத்தியில் மந்திரங்களை ஜெபித்து, பயபக்தியுடன் முகத்தை வெளிக்காட்டியபடி திருடிச் சென்ற இந்த திருடன் பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.