தவறி விழுந்த இளைஞன்! குடல் வெளியே வந்த பரிதாபம்! அப்படியே 10 கிமீ ஓடி மருத்துவமனைக்கு வந்த துணிச்சல்!

ஐதராபாத்: வயிறு கிழிந்த நிலையில் குடலை பிடித்துக் கொண்டு, 10 கிமீ தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் நடந்துசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேசம் மாநிலதைச் சேர்ந்தவர் சுனில் சவுகான் (38 வயது). இவர், உத்தரப் பிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை நெல்லுருக்கு ரயிலில் வந்துள்ளார். சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அவர், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பல் ரயில் நிலையம் வந்தபோது அதிகாலை 2 மணிக்கு எழுந்து,  கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராவிதமாக, ஓடும் ரயில் ஒரு சிறிய வளைவில் திரும்பியபோது, சுனில் நிலைதடுமாறி ரயிலில் இருந்து தண்டவாளத்தில் கீழே விழுந்துள்ளார். இதில், தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி ஒன்று அவரது வயிற்றை குத்தி கிழித்ததில், அவரது வயிறு கிழிந்து குடல் வெளியே சரிந்துள்ளது. 

உடனடியாக சுதாரித்துக் கொண்ட சுனில், சினிமா படத்தில் வருவதுபோல, வலியை பொறுத்துக் கொண்டு, தனது சட்டையை கழட்டி, வெளியில் சரிந்த குடலை இறுக்கிப் பிடித்து வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொண்டார். பின்னர், அங்கிருந்து நடந்தே, மருத்துவமனை தேடி சென்றுள்ளார்.

ஆனால், 10 கிமீ தொலைவுக்கு எந்த ரயில் நிலையமும் இல்லை. இறுதியாக, தண்டவாளத்திலேயே நடந்து ஹாசன்பர்தி ரயில் நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்த ரயில் நிலைய பொறுப்பாளர் நவீன் பாண்டியா  சுனிலின் பரிதாப நிலையை பார்த்து, உடனடியாக, ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். 

பின்னர் ஆம்புலன்ஸ் வந்து சுனில் எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உயிருடன் காப்பாற்றப்பட்டார். கீழே விழுந்ததில் தனது செல்ஃபோனை தொலைத்துவிட்டதாக தெரிவித்த சுனில், தனது சகோதரரின் அலைபேசி எண்ணை நினைவில் வைத்து போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா படத்தில் வருவதுபோல, இந்த சம்பவம் நடைபெற்று, சுனில் தற்போது உயிருடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.