ஐதராபாத்: சாலைகளில் காணப்படும் குழிகளில் மரம் நட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பட்டப் பகல்..! நட்ட நடுரோடு..! ஆண்களும் - பெண்களும் சேர்ந்து செய்த விநோத செயல்! ஏன், எதற்கு தெரியுமா?

ஐதராபாத் நகரில் உள்ள பீராடிகுடா பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. இது போக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சலாக உள்ளதால், சாலையை செப்பனிடும்படி அப்பகுதி மக்கள் பலமுறை அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில் கடும் அதிருப்தி அடைந்த மக்கள், சாலையில் காணப்படும் குழிகளில் மரக்கன்றுகளை நட்டு, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
நல்ல சாலை கிடைக்கவில்லை. அதிகாரிகளும் மக்களின் கோரிக்கையை கேட்பதில்லை. இப்படிப்பட்ட உலகில், சாலையோரம் மரம் நடுவதை விட இப்படியான குழிகளில் மரம் நட்டால் நல்ல பலன் கிடைக்கும் என, உள்ளூர் மக்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இதுதொடர்பான உரிய நடவடிக்கை எடுத்து, விரைவில் சாலைகளை செப்பனிட முயற்சித்து வருகிறோம் என, பீராடிகுடா நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.