ஐதராபாத் பெண் டாக்டரின் பரபரப்பு பேச்சு என தீயாய் பரவும் வீடியோ! உண்மை பின்னணி இது தான்!

ஐதராபாத் பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்த பெண் டாக்டரின் வீடியோ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.


ஐதராபாத் அருகே சமீபத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வந்த 26 வயது பெண்ணை, சிலர் கடத்திச் சென்று வன்புணர்வு செய்து, பிறகு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்களை என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், அந்த பெண் டாக்டரின் வீடியோ என்று கூறி ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  

4 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் விருது பெறுவதைக் காண முடிகிறது. அது மட்டுமின்றி, அதிலேயே அவரது பெயர் தெளிவாக அறிவிக்கப்படுவதையும் காணலாம். ஆம், நிகழ்ச்சி அறிவிப்பாளர், ஸ்ரீமதி அலோலா திவ்யா ரெட்டி - தெலுங்கானா என அறிவிக்கிறார். அதன்பிறகு அந்த பெண் மேடையேறி விருது பெறுவதோடு, சில நிமிடங்கள் பேசுகிறார்.

அந்த மேடையில் மத்திய அரசின் முத்திரையுடன் கூடிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வுத் துறை அமைச்சகம் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே, அதில் இருப்பவர் ஒரு இளம் தொழில் முனைவோர் ஆவார். அவரது பெயரும் திவ்யா ரெட்டி என தெளிவாகிறது. ஆனால், இந்த உண்மை புரியாத சிலர், வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, அரசு விருது பெற்ற கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் என்றெல்லாம் கட்டுக்கதை பரப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம் என இந்த செய்தியின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.