ஜோடியாகத்தான் வர வேண்டும்..! சிங்கிள்களுக்கு நோ அனுமதி..! புத்தாண்டு கொண்டாட போலீசார் போட்ட பகீர் நிபந்தனை! எங்கு தெரியுமா?

ஐதராபாத்: புத்தாண்டு பார்ட்டிகளில், சிங்கிள்ஸ் யாரும் பங்கேற்க அனுமதி இல்லை என்று ஐதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.


தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் செயல்படும் ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் அலுவலகம்  இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில், இரவு நேர பார்ட்டிகள் களைகட்டும். இதனை கட்டுப்படுத்தும் வகையில், ராச்சகொண்டா போலீசார், இப்புதிய உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ராச்சகொண்டா போலீஸ் எல்லைக்கு உள்பட்ட மால்கஜ்கிரி, எல்பி நகர், போங்கிர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் புத்தாண்டு பார்ட்டிகளில் பங்கேற்க சிங்கிள்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பார்ட்டியில் பங்கேற்க முடியாது. அதேசமயம், ஜோடியாகச் சென்றால் மட்டுமே பார்ட்டியில் பங்கேற்க அனுமதி தரப்படும். மேலும், பண்ணை வீடுகளில் நடைபெறும் கேளிக்கை விருந்துகளில், ஸ்பீக்கரில் இருந்து வெளிப்படும் ஒலி அளவு 45 டெசிபல்தான் இருக்க வேண்டும்.  

டிசம்பர் 31 இரவு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, ரூ.10,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும் என்றும் ராச்சகொண்டா போலீசார் குறிப்பிட்டுள்ளனர். ஐதராபாத்தின் புறநகர்ப்பகுதி என்பதால், ராச்சகொண்டாவில் பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள் அதிகளவில் செயல்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.