ஓ பாசிடிவுக்கு பதில் பி பாசிடிவ் ரத்தம்! டாக்டரின் விபரீத செயலால் இளம் தாய்க்கு ஏற்பட்ட கொடூரம்!

பெண் நோயாளிக்கு தவறான ரத்த வகை கொடுத்து, அவர் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், அக்தர் பனோ என்ற பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு, அவருக்கு சிசேரியன் செய்ய மருத்துவர்கள் தீர்மானித்தனர். இதையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலமாக இருந்த நிலையில், பிரசவத்திற்கு பின்பு, அப்பெண்ணின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அவருக்கு கூடுதல் ரத்தம் செலுத்த முடிவு செய்தனர். 

இதற்காக,  அவருக்கு பி பாசிட்டிவ் வகை ரத்தம் குறிப்பிட்ட அளவுக்கு ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினரையும், டாக்டர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. விசாரணையில், அந்த பெண் உண்மையில் ஓ பாசிட்டிவ் வகையை சேர்ந்தவர் என்றும், இதை சரியாக தெரிந்துகொள்ளாமல், பி பாசிட்டிவ் வகை ரத்தத்தை மருத்துவரும், நர்ஸ் ஒருவரும் செலுத்தியுள்ளனர் என்றும் தெரியவந்தது. 

இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமான 2 டாக்டர், 2 நர்ஸ் மற்றும் லேப் டெக்னிஷியன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் ட்யூட்டியில் இருந்த பேத்தாலாஜிஸ்ட் ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.