புகுந்த வீட்டில் கொடுமை! பிறந்த வீட்டில் தனிமை! திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வரதட்சினை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமானே 5 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நரசிம்மா-அஞ்சம்மா தம்பதியின் மகளான ஸ்ராவணி 5 மாதங்களுக்கு முன்னர் ராமஞ்சநேயுலுவை திருமணம் செய்துகொண்டார். அப்போது வரதட்சிணையாக அவரது பெற்றோர் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அணிவித்து அனுப்பியுள்ளனர். ஆனால் திருமண பந்தத்தை புனிதமாக கருதாமல் வியாபாரமாக கருதிய ராமஞ்சநேயுலுவின் பெற்றோர், மீண்டும் நகை, பணம் எடுத்து வருமாறு ஸ்வராணியை கொடுமைப் படுத்தி உள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஸ்வராணி தனக்கு நேரும் கொடுமையை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். ஆனால் அவரது பெற்றோரோ சிறிது நாள் பொறுத்துக் கொள்ளுமாறும், நாளடைவில் பிரச்சனை சரியாகிவிடும் என்றும் ஆறுதல் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் மாமியாரின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாத ஸ்வராணி விரக்தியின் எல்லைக்கே சென்றார்.

புகுந்த வீட்டில் நிம்மதி இல்லாமலும் பொறந்த வீட்டில் ஆதரவில்லாமலும் தவித்து வந்த ஸ்வராணி வீட்டின் குளியலறையில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்வராணியின் மாமியார் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

இதையடுத்து ஸ்வராணியின் கணவர் ராமஞ்சநேயுலு மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். புதுமைப் பெண் குறித்து பாரதியின் பாடல்களை புத்தகத்தில் மட்டுமே படித்தால் போதும் என்று எண்ணும் பெண்களுக்கு இதுபோன்ற துயரங்களுக்கும் முற்றுப் புள்ளி இல்லை என்றே கூறலாம்.