படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி..! மாமியாரிடம் சிரித்துக் கொண்டே கணவன் சொன்ன ஒரு வார்த்தை! சென்னை பயங்கரம்!

சென்னை: ஊரடங்கு உத்தரவையும் மீறிய மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.


தமிழகம் முழுவதும் கோவிட் 19 வைரஸ் தொற்றை சமாளிக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்த ஒரு கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ரவி (40 வயது). இவரது மனைவி சாவித்ரி (38 வயது). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சாவித்ரி அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். ரவி, பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

கொரோனா வைரஸ் பற்றிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, இவர்கள் மட்டும் தனிமையில் இருந்தனர். குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனராம். இந்நிலையில், மார்ச் 29ம் தேதியன்று காலை சாவித்ரியின் அம்மா திடீரென அவரை தேடி வீட்டிற்குச் சென்றுள்ளார். சாவித்ரி எங்கே என்று ரவியிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர், 'அவள் கட்டிலில் படுத்திருக்கா' என்று சிரித்தபடி சொல்லியுள்ளார்.  

உள்ளே சென்று பார்த்த சாவித்ரியின் அம்மா அதிர்ச்சி அடைந்தார். கட்டிலில் ரத்த வெள்ளத்தில் மகள் சடலமாக இருப்பதை பார்த்த அவர் உடனடியாக சத்தம்போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ரவியை விசாரித்தனர்.  

அப்போது, ''கொரோனா வைரஸ் பற்றிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, இருவரும் வீட்டிலேயே இருந்ததில், கடந்த 28ம் தேதி நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில், நான் கடுமையாக ஆத்திரமடைந்தேன். இரவு சாவித்ரி உறங்கிய பின், அவளை சுத்தியலால் ஓங்கி அடித்துக் கொன்றுவிட்டேன்,'' என்று சிரித்தபடி போலீசாரிடம் ரவி கூறியிருக்கிறார்.  

அந்த நபருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக உறுதி செய்த போலீசார், அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.