உயிரிழந்த கணவன் மார்பில் தலை வைத்து உயிர் நீத்த மனைவி! தேனியில் நெகிழ வைக்கும் சம்பவம்!

மரணத்திலும் இணைபிரியாத தம்பதியினரை நினைத்து, தேனி மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.


அல்லிநகரத்தைச் சேர்ந்த முருகேசன் - ராஜம்மாள் தம்பதிதான் அவ்வாறு உயிரிழந்தவர்கள். ஊர் ஊராக, துணி விற்று, தங்களது 6 குழந்தைகளையும் கரை சேர்த்த இந்த தம்பதியினர், முதுமை காரணமாக, தனியாக வசித்து வந்துள்ளனர். இதில், முருகேசன் கடந்த 3 ஆண்டுகளாக, படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். அவரை ராஜம்மாள்தான் கவனித்துக் கொண்டதாக, தெரிகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை, முருகேசன் ராஜம்மாளின் கண் முன்னே மரணமடைந்தார். இதைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறிய ராஜம்மாள், தனது கணவனின் உடல் மீதே தலை வைத்து அழுத்துள்ளார். அப்படியே மயக்கமடைந்தும் விட்டார். பின்னர், அவரது உறவினர்களும், மகன்களும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார். 

இதுபற்றி, ராஜம்மாளின் மகன் பார்த்தசாரதி கூறுகையில், என் பெற்றோர் இருவரும், ஒருவர் மீது ஒருவர் மிகவும் பாசமாக இருப்பார்கள். ஒருவர் இறந்தாலும் இன்னொருவர் இருக்க மாட்டேன் எனக் கூறுவது வழக்கம். அதன்படியே, அப்பா இறந்ததும், அம்மாவும் இறந்துவிட்டார், என வேதனைபட குறிப்பிட்டார்.