அப்பா அடிச்சி தள்ளுனார்! அத்தை மண்ணெண்ணெய் ஊத்துனாங்க! தாத்தா தீ வைத்தார்! தாயின் கூறலை நேரில் பார்த்த பிஞ்சு!

லக்னோ: குழந்தையின் கண் முன்னே தாயை அவரது கணவன் உள்ளிட்டோர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம், ஸ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ளள காத்ரா கிராமத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நபீஸ் (26), என்பவர்,  சாயிஷா (20) என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 5 வயதில் பாத்திமா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, சாயிஷாவுக்கு ஃபோன் செய்த நபீஸ், அவரை விவாகரத்து செய்வதாகக் கூறி, 3 முறை தலாக் சொல்லிவிட்டு, ஃபோனை வைத்தார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த சாயிஷா இதுபற்றி கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதன்பேரில் வீடு திரும்பிய நபீஸ், அங்கே தன் வீட்டில் இருந்த சாயிஷாவை பார்த்து ஆத்திரம் அடைந்தார். ''முத்தலாக் கூறிய பிறகும், எப்படி நீ என் வீட்டில் இருக்கலாம்,'' என்று கூறி அவர் தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, நபீஸின், பெற்றோர், சகோதரியும் ஒன்று சேர்ந்து சாயிஷாவுடன் தகராறு செய்ய தொடங்கினர். 

இதில், திடீரென சாயிஷாவை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினர். படுகாயங்களுடன் சாயிஷாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி சாயிஷாவின் மகளான 5 வயது சிறுமி பாத்திமாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

அந்த சிறுமி கூறுகையில், ''முத்தலாக் கூறியது பற்றி அம்மா, அப்பாகிட்ட கேட்டாங்க. அதுல அப்பா கோபமாகி, அம்மாவை அடிக்க ஆரம்பிச்சாரு.  அப்ப பாத்து அங்க வந்த அத்தை (நபீஸ் சகோதரி) அம்மா (சாயிஷா) மேல எண்ணெய் ஊத்தினாங்க. தாத்தாவும், பாட்டியும் உடனே தீ வைத்து கொளுத்திட்டாங்க,'' என்றார். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.