டெல்லி வன்முறைகளை மனித உரிமை ஆணையம் விசாரிக்கிறது!

தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தொடர் வன்முறைகள், படுகொலைகள் தொடர்பாக தேசிய மனிதவுரிமை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.


வன்முறைகள் குறித்த ஊடகச் செய்திகளின்படி சுயவழக்காக எடுத்துக்கொண்ட ஆணையம், அதன் விசாரணைப் பிரிவு தலைமை இயக்குநர் தலைமையில் உண்மை அறியும் குழுவை, விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறையில் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக இரு உண்மை அறியும் குழுக்கள் மூலம் விசாரித்து அறிக்கைதர ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இரு தரப்புகளுக்கு இடையே வன்முறைகள் தொடர்ந்தநிலையில் ஆணைய அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருதி, நிலைமை சற்று தணிந்துள்ள நிலையில் விசாரணைக் குழுவை அனுப்ப முடிவுசெய்ததாகவும் ஆணையத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுக்கள் இரண்டும், கிழக்கு டெல்லி காவல் மாவட்டத்தின் கட்டுப்பாட்டு அறை, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், வன்முறையில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.