வேதாரண்யம் கலவரம் வெடித்தது எப்படி? பரவியது யாரால்? பரபரப்பு ரிப்போர்ட்!

வேதாரண்யத்தில் நேற்று திடீரென வெடித்த கலவரத்தால் நாகை மாவட்டமே பதற்றத்தில் உள்ளது.


வேதாரண்யம் நகர் பகுதியில் கடைத்தெரு உள்ளது. இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது பொலிரோ காரில் வந்துள்ளார். அங்குள்ள கடை முன்பு தனது காரை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மற்றொரு நபர் காரை சாலையில் நிறுத்தியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் வந்த நபருக்கும் கார் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வயதில் சிறியவரான வந்த நபர் பொலிரோ கார் உரிமையாளரை ஒருமையில் பேசியதாக சொல்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த கார் உரிமையாளர் அந்த சிறிய நபரை தாக்கியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் பொலிரோ உரிமையாளர் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். நேராக காவல் நிலையம் செல்ல அவர் தனது காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

அப்போது தாக்குதலுக்கு ஆளான இளைஞர் உடனடியாக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தான் தாக்கப்பட்ட தகவலை கூறியுள்ளார். மேலும் பொலிரோ கார் உரிமையாளர் நேராக காவல் நிலையம் செல்வதாகவும், தானும் காவல் நிலையத்திற்கு வருவதாகவும் சொல்லியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலுக்கு ஆளான நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்துவிட பொலிரோ கார் உரிமையாளரும் அங்கு வந்துள்ளார். அவரை பார்த்த மாத்திரத்திலேயே இளைஞரின் உறவினர்கள் தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக அந்த பொலிரோ கார் உரிமையாளர் காவல் நிலையத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தார். இந்த சூழலில் தாக்குதலுக்கு ஆளான நபர் அங்கு வந்த போது அவர் அடைந்த காயத்தை பார்த்து அவரது உறவினர்களுக்கு கோபம் உச்சத்திற்கு சென்றது.

உடனடியாக பொலிரோ கார் உரிமையாளரை தங்களிடம் ஒப்படைக்குமாறு காவல் நிலையத்தில் இருந்த காவலர்களிடம் இளைஞரின் உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். காவல் நிலையத்தில் இரண்டு பெண் காவலர்களும் ஒரே ஒரு ஏட்டய்யாவும் மட்டுமே இருந்துள்ளனர்.

அதற்குள்ளாக தாக்கப்பட்ட இளைஞரின் நண்பர்களும் உறவினர்களும் பொலிரோ காரை தாக்க ஆரம்பித்தனர். மேலும் ஒரு கட்டத்தில் அந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பொலிரோ கார் உரிமையாளர் தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அவர்கள் வந்த வேகத்தில் காரை எரித்தது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று எண்ணி ஆத்திரம் அடைந்துள்ளனர். ஏற்கனவே வேதாரண்யத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் இடையே மோதல் இருந்துள்ளது.

இந்த நிலையில் கார் எரிக்கப்பட்டதால் உடனடியாக அவர்கள் அங்கிருந்த அம்பேத்கர் சிலை மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். போதுமான போலீசார் இல்லாததால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சிலையை முற்றிலுமாக சேதப்படுத்திவிட்டு அவர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அம்பேத்கர் சிலை உடைப்பு தகவல் காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்தது. ஆங்காங்கே தலித் மக்கள் சாலை மறியலில் அமர்ந்தனர். இதனால் நாகை மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவவே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர புதிய அம்பேத்கர் சிலை உடனடியாக அந்த இடத்தில் நிறுவப்பட்டது.

இதனால் ஓரளவிற்கு பிரச்சனை சுமூகமானது. காரை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை மிகப்பெரிய ஜாதிய மோதலுக்கு காரணமாக அமைந்துவிட்டது. போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டதால் பிரச்சனை பெரிதாகவில்லை.