ஆசிரியைக்கு எப்படி ஜாதி திமிர் வந்தது..? யார் காரணம்!

இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவனை இன்னொரு மாணவனின் மலத்தை அள்ள வைத்த நாமக்கல் ஆசிரியைக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. ஓர் ஆசிரியர் ஏன் இப்படி செய்தார் என்று பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.


அந்த ஆசிரியைப் பார்த்தால் இளம் வயதினராகத்தான் இருக்கிறார். அவருக்குள் இப்படி மனிதநேயமற்ற -சாதியச் சிந்தனை இருக்கிறதே என்று கவலைகொள்வதா? அல்லது அவர் கற்ற கல்வி அவரது கொடூர சாதிய சிந்தனையை கொஞ்சம் கூட மாற்றவில்லையே என்று வருந்துவதா?

திருப்பத்தூரின் மேலே ஏதோ ஒரு மலை கிராமத்தில் தன் கைகாசைப் போட்டு மாணவர்களுக்கு கணினி-நவீனவகை கல்வியூட்டும் ஆசிரியர் வாழ்கிற அதே தமிழகத்தில் தான் சாதிய மனோபாவத்துடன் மாணாவர்களை வதைக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

யார் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என பார்த்தால் கல்வியை சேவையாக செய்யுமாசிரிய பெருந்தகைகள் மிகக் குறைவு. கல்வியை அரசுப் பணியாகக் கருதி அதன் மூலம் தன் அழுகிய சிந்தனைகளை அரங்கேற்றும் ஆசிரியர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் ஒரு வீடியோ பரபரப்பாக டிரால் ஆகிக்கொண்டு இருந்தது.

மூன்றாம் நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளை, ஆசிரியர்கள் தங்கள் எச்சில் பாத்திரங்களைக் கொடுத்து கழுவவைக்கும் வீடியோ. தான் உண்ட டிபன் பாக்ஸைக் கூட ஆசிரியரால் கழுவ முடியாதா? சிறுபிள்ளைகளிடம் கொடுத்து கழுவச் சொல்லும் ஆசிரியர்களிடம் இருந்து குழந்தைகள் என்ன மாண்பினைக் கற்றுக்கொள்ளும்?

கிராமம் மற்றும் சிறுநகர பள்ளிகளில் இன்றும் சாதிய வன்மத்தை விதைப்பதில் ஆசிரியர்களின் பங்கு அதிகம். இலையென்று மறுப்பவர்கள் இருக்கிறீர்களா? ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சாதிய ஒடுக்குமுறையை அதிகம் சந்திக்கும் இடம் என்றால் அது பள்ளிக்கூடம்தான்.

ஆசிரியப் பணிக்கென்று இருக்கும் சமூக பொறுப்பினையும் அறத்தையும் ஆசிரியர்கள் உணர வேண்டுமானால் அவர்களுக்கு கண்டிப்பாக சாதிய மனோபாவத்தை போக்கும் ஒரு பயிற்சி வகுப்பை கல்வித்துறையே நடத்த வேண்டும். அதுகுறித்து கல்வியாளர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் சிந்திக்க வேண்டும். ஆசிரிய சமூகத்திற்கு சாதி சிந்தனை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை.