உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் எவ்வளவு வித்தியாசம்..?

உள்ளாட்சித் தேர்தல் சரியான முறையிலே நடைபெறவில்லை என்று ஸ்டாலின் சொன்னதற்கு, முதல்வர் எடப்பாடி, ‘எந்த இடத்திலும், எந்த தவறும் நடைபெறவில்லை.


அரசு ஊழியர்கள் தான் இந்த வாக்குகளை எண்ணினார்கள். அப்படி என்றால் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் நேர்மையோடும், நீதியோடும், தர்மத்தோடும், நடுநிலையோடும் செயல்பட்டு இருக்கின்றார்கள்.

அதனால் தான் சுமார் 450 சுயேட்சைகள் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எந்த கட்சியும் சேராதவர்கள். ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது. உங்கள் கூட்டணிக் கட்சியிலே இடம் பெற்றவர் கிடையாது, எங்கள் கூட்டணி கட்சியிலே இடம் பெற்றவர் கிடையாது.

ஆகவே, எந்த பின்பலமும் இல்லாத சுயேட்சை வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், இந்த தேர்தல், தேர்தல் ஆணையம் மூலமாக எவ்வளவு சிறப்பாக, நடுநிலையோடு நடைபெற்று இருக்கிறது என்று எடப்பாடி கூறியிருக்கிறார். மேலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை பொறுத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 43.73 சதவிகிதம் வாக்குகளை பெற்றிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 45.32 சதவிகிதம் பெற்றிருக்கிறது. நீங்கள் 1.59 சதவிகிதம் வாக்குகள் தான் வித்தியாசமாக இருக்கிறீர்கள். அதேபோல மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 39.60 சதவிகிதம் வாக்குகள் அண்ணா திமுக கூட்டணி பெற்றிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40.35 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. 0.75 சதவிகிதம்தான் அதிகம் என்று எடப்பாடி சட்டமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார்.