2 நாட்கள்! அடுத்தடுத்து 10 சிறுவர்கள் பரிதாப பலி! தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் விபரீதம்! பதற வைக்கும் காரணம்!

தமிழகத்தின் நான்கு முக்கிய மாவட்டங்களில் இரண்டு நாட்களில் 10 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் திருவாரூர், பெரம்பலூர் கிருஷ்ணகிரி, அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் நீர் நிலைகளில் நீர் நிரம்பி காணப்பட்டு வந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட தன் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கச் சென்று வந்துள்ளனர்.

அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி திவ்யா மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீராம் ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமலை ராஜன் என்று அழைக்கப்படும் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கே குளித்துக் கொண்டிருக்கும்போது விளையாட்டுத்தனமாக ஆழம் நிறைந்த பகுதிக்குச் சென்று இருவரும் நீரில் மூழ்கினர்.

இதில் ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க திவ்யா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதேபோல் அதே மாவட்டத்தின் ஸ்ரீ வாஞ்சியத்தில் வெங்கடேஷ் மற்றும் விக்னேஷ் என்ற சிறுவர்கள் முடிகொண்டான் ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்தி குப்பத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரும் அவரது சித்தப்பா மகனான ராஜ் என்பவனும் ஆற்றில் குளிக்கச் சென்ற பொழுது நீரில் சிக்கி உயிரிழந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நண்பர்களுடன் வெள்ளாற்றில் குளிக்கச் சென்ற 12 வயது சிறுவனான ஹரி கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்தூர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து சென்று ஆற்றில் குளிக்கச் சென்று உள்ளனர். இதில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அன்பரசன் ஜெகன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் அவர்களது குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடுவதாக எண்ணி ஆபத்தான நீர் நிலைகளுக்குச் சென்று உயிரிழக்க நேரிடுகிறது. ஆகையால் விடுமுறை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் மீது கூடுதல் அக்கறை செலுத்துவது மிக அவசியமாக கருதப்படுகிறது.

மேலும் பிள்ளைகள் யாருடன் எங்கு சென்று விளையாடுகிறார்கள் என்பதையும் தினந்தோறும் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது.