காங்கிரஸ் தலைவராகப் போகும் தலித்! வரலாற்றில் முதல் முறை!

100 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியில் முதல் முறையாக தலித் ஒருவர் தலைவராக பதவி ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமாகியுள்ளன. 

புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரான 90 வயதாகும் மோதிலால் வோரா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மோதிலால் வோரா இடைக்கால தலைவராக இருந்து காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வார்என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுசில் குமார் ஷிண்டே, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

இவர்களில் அம்ரீந்தர் சிங் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் மாநில முதலமைச்சர்களாக உள்ளனர். எனவே அந்த பதவியை தாரை வார்த்துவிட்டு காங்கிரஸ் தலைவராகும் ரிஸ்கை எடுக்க இவர்கள் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. இதே போல் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் மீது காந்தி குடும்பத்திற்கு நம்பிக்கை இல்லை.

எனவே தங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான அதே சமயம் தங்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று கருதுகின்றனர். அதற்கு சுஷில் குமார் ஷிண்டே அல்லது மல்லிகார்ஜூன கார்கே தான் சரியான தேர்வாக இருக்க முடியும் என்று அவர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் இருவருமே தலித்துகள் என்பது கூடுதல் பலமாக இருக்கும் என்று காந்தி குடும்பம் யோசிக்கிறது.

தலித் ஒருவரை காங்கிரஸ் தலைவராக்குவதன் மூலம் அந்த சமுதாய வாக்கு வங்கியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதுடன் சிறுபான்மையினரின் ஆதரவையும் பெறலாம் என்று கணக்கு போடுகிறார்கள். எனவே அவர்கள் இருவரில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய காந்தி குடும்பம் ஆயத்தமாகி வருவதாக சொல்கிறார்கள்.