பன்னீர்செல்வமே மதிக்காத ஆறுமுகசாமி ஆணையம்! அப்பலோவுடன் மோதியதால் ஏற்பட்ட விபரீதம்!

தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தில் முதல் கோரிக்கையே, ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் என்று சொன்னார்.


துணை முதல்வர் பதவி கொடுத்ததும் மற்ற அனைத்து கோரிக்கைகளையும் தூக்கிப் போட்டு, ஆணையம் அமைத்தால் போதும் என்ற அளவுக்கு இறங்கிவந்தார். 

அதனால் கடலில் கல்லைத் தூக்கிப் போடுவதும், ஆணையம் அமைப்பதும் ஒன்றுதான் என்ற வகையில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் இதுவரை பல முறை அழைத்தும் ஓ.பன்னீர்செல்வம் அங்கு ஆஜராகவே இல்லை.

அதன் பின்னே சுவாரஸ்யமான பல காரணங்கள் உள்ளன. ஏனென்றால், ஜெயலலிதா பதவியில் இருந்தபோது நடந்த எல்லா விஷயங்களும் பன்னீருக்குத் தெரியும். இது குறுக்கு விசாரணையின்போது உடைக்கப்படும் என்ற பயத்தினால்தான் அங்கே போகாமல் சாக்குப்போக்கு சொல்லி தப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆணையத்திற்கு நாங்கள் சொல்லும் கருத்து புரியவில்லை, தகுதி வாய்ந்த மருத்துவர் குழுவை வைத்து கேட்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் விஷயம் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது.

இன்று இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. மேலும், மருத்துவர் குழு அமைப்பதில் ஆணையத்துக்கு என்ன சிக்கல் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆக,  ஆணையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திவைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஏற்கெனவே கூடுதல் காலத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆணையத்துக்கு சிக்கல்தான். சசிகலா, பன்னீர் ஆகியோரை விசாரிக்காமல் மற்றவர்களை எல்லாம் விசாரித்து என்னதான் உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறதோ இந்த ஆணையம்?