தகுதித் தேர்வுகளில் ஒருபோதும் ரிசர்வேஷன் கிடையாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தகுதித் தேர்வுகளில் எந்த அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


மத்திய ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான அறிவிப்பை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றம் விடுமுறைகால அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு என்பது எந்த நிலையிலும் இயக்க முடியாத ஒன்று என கூறினர். இட ஒதுக்கீடு என்பது சேர்க்கை மற்றும் பணி நியமனம் ஆகியவற்றில் மட்டுமே கடைபிடிக்க வேண்டியது என்றும் தேர்வில் இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதாவது தகுதித் தேர்வு முடிந்து  ஜாதி அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதுதான் கடைபிடிக்கப்படும் முறை என்றும் அதில் மாற்றம் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.