ஜாதி மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்! ஜாதிவாரி இடஒதுக்கீட்டிற்கு எதிராக பகிரங்க அழைப்பு!

கேரள மாநிலம் கொச்சியில் தமிழ் பிராமணர்கள் மாநாடு நடைபெற்றது.


இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நீதிபதி சிதம்பரேஷ் பேசியதாவது: பிராமணர்கள் தங்களின் யோக்கியமான செயல்களால் இரண்டு முறை பிறக்க கூடியவர்கள். பிராமணர்கள் என்றால் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். பிராமணர்கள் எப்போதும் நல்லதையே நினைக்க கூடியவர்கள். 

பிராமணர்களின் குணம் எப்போதும் உயர்வானதாக இருக்கும். பிராமணர்கள் பெரும்பாலும் சைவ உணவை உண்பார்கள். கர்நாடக இசையை விரும்புவார்கள். கேரளாவில் பிராமணர்கள் மட்டுமே வசிக்க கூடிய இடங்கள் உண்டு. திருவனந்தபுரத்தை எடுத்துக் கொண்டால் நெல்லை பிராமணர்கள் இருப்பார்கள். பாலக்காட்டை எடுத்துக் கொண்டால் தஞ்சை பிராமணர்கள் இருப்பார்கள். பிராமணர்களின் அக்ரஹாரம் என்பது ஒரு கலாச்சாரம்.

பண்பாட்டை காக்க வேண்டும் என்றால் அக்ரஹாரங்களை காக்க வேண்டும். அக்ரஹாரங்களில் அடுக்குமாடிகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஜாதி வாரியிலான இடஒதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்க்க வேண்டும். ஒரு சமையல்காரரின் மகன் தான் பிராமணன் என்பதால் இடஒதுக்கீட்டை பெற முடியாது. அதுவே ஒரு மிகப்பெரிய மரக்கடை உரிமையாளரின் மகன் இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதால் இடஒதுக்கீட்டை பெற முடியும்.

எனவே சாதிவாரி இடஒதுக்கீட்டிற்கு எதிராக பிராமணர்கள் போராட வேண்டும். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பெற முயற்சிக்க வேண்டும். நீதிபதி எனும்அரசியல் அமைப்பு பதவியில் இருப்பதால் இந்த விஷயத்தில் எனது கருத்தை நான் தெரிவிக்க முடியாது. ஆனால் உங்களுக்கு எது நல்லதோ அதை நான் எடுத்துக்கூறுகிறேன். அதனை நீங்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு சிதம்பரேஷ் பேசியுள்ளார்.