திருநங்கையர் என்று இனி சொல்லக்கூடாதா? அதென்ன மூன்றாம் பாலினம்?

சமீபத்தில் தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், திருநங்கையர் இனி மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.


அதென்ன மூன்றாம் பாலினம் என்று பிரபல எழுத்தாளர் பாமரன் கடுமையாக சாடியிருக்கிறார். பல்லாண்டு காலமாய் பல்வேறு இழிசொற்களுக்கும் வசைச் சொற்களுக்கும் ஆளாகி வந்த அந்த மக்கள் ஓரளவுக்காவது கண்ணியத்துடன் பார்க்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இப்பெயரும் ஒரு காரணம்.

ஆனால் இப்போது திருநங்கைகள் என்பதற்கு பதிலாக ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்றுதான் அவர்களைக் குறிப்பிடப் படவேண்டும் என அர்த்தமற்ற ஆணையினைப் பிறப்பித்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு. முன்னர் எத்தனையெத்தனையோ தரக்குறைவான வார்த்தைகளால் விளிக்கப்பட்ட அம்மக்கள் தொண்ணூறுகளின் மத்தியப் பகுதியில் ‘அரவாணிகள்’ என அடையாளப்படுத்தப்பட்டனர். 

அதற்கு முன்னர் மதி கெட்டவர்களால் அழைக்கப்பட்ட ‘அலிகள்’ என்கிற வார்த்தைக்கு விடைகொடுக்கப்பட்டு ‘அரவாணிகள்’ என்கிற வார்த்தை புழக்கத்திற்கு வந்தது. இந்தத் திருநங்கைகள் சமூகத்தின் தனிச்சிறப்பே ஆண்களைப் போலவோ பெண்களைப் போலவோ அவர்களை எந்தவொரு சாதிக்குள்ளோ, எந்தவொரு மதத்திற்குள்ளோ, இனத்துக்குள்ளோ அடக்கிவிட முடியாது.

அவ்வளவு ஏன் நாட்டின் எல்லைக்கோடுகள்கூட அவர்களைப் பிரித்துவிட முடியாது என்பதுதான் எதார்த்த உண்மை. இப்படி பல்வேறு கலாச்சாரங்களையும் பன்முகத்தன்மையையும் உள்ளடக்கிய அவர்களை இந்துமதச் சொல்லாடலுக்குள் அடங்கும் புராணக்கதை ஒன்றினது கதாபாத்திரத்தின் பெயரால் ‘அரவாணி’ என்றழைப்பது எப்படி பொருத்தப்பாடு உடையதாக இருக்கும்?

இத்தகைய கேள்விகள் அம்மக்கள் மத்தியிலும் நம்மைப் போன்ற தோழமை சக்திகள் மத்தியிலும் 2000 த்தின் மத்திய காலகட்டத்தில் எழுந்தது. அதனால் 1996- _ 97 காலகட்டத்திலேயே வெகுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டிருந்த தோழி நர்த்தகி நடராஜ் தன்னைத் திருநங்கை என்றே அடையாளப்படுத்தினார்.

என் நேசத்திற்குரிய தோழி கல்கி சுப்ரமணியம் தான் நடத்திவந்த ‘சகோதரி’ பத்திரிக்கையில் அரவாணி குறித்த கேள்வியை எழுப்பி அதனை விவாதத்திற்கு உட்படுத்தினார். அக்காலகட்டத்தில் இச்சமுதாய மக்களுக்கு பக்கபலமாய் நின்ற அக்கா ஆஷா பாரதியும், இப்பணிகளில் தொடர்ந்து பங்காற்றி வருகிற தோழி பிரியா பாபுவும் பல்வேறு திசைகளில் இச்சொல்லைச் சுமந்து சென்றதன் விளைவே ‘அரவாணி’ இன்று உருமாறி திருநங்கையாய் வந்து நிற்கிற வரலாறு.

அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டது கலைஞரது ஆட்சியில்தான் என்பதையும் நாம் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இத்தகையதொரு நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்ட பெயருக்குத்தான் இன்றைக்கு வந்திருக்கிறது ஆப்பு. அதுவும் அரசாணை வடிவத்தில்.

அறிவார்ந்து செயல்படக்கூடிய எவரும் அப்பெயர் எவர் காலத்தில் வந்தது? என்பதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க மாட்டார்கள். எக்காலத்தில் நடைமுறை படுத்தப்பட்டாலும் அப்பெயர் பொருத்தப்பாடு உடைய பெயர்தானா? இதுகாறும் இருந்துவந்த இழிவை நீக்கக்கூடிய பெயர்தானா என்பதைப் பற்றித்தான் சிந்திப்பார்கள்.

இவையெல்லாவற்றையும் விட, ஒன்று, இரண்டு, மூன்று என்று மனித இனத்தைக் கூறு போட நமக்கென்ன உரிமை இருக்கிறது? திருநங்கைகள் மூன்றாம் பாலினத்தவர் என்றால், முதலாம் பாலினத்தவர் யார்? இரண்டாம் பாலினத்தவர் யார்? அதையெல்லாம் தீர்மானிக்க முதலில் நாம் யார்?