அதிரடி நீதிபதி மணிக்குமார் கேரளாவுக்குப் போகிறார்..! ஹெல்மட் கேள்வி கேட்டவருங்கோ..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், 2009ம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார்.


எந்த ஒரு வழக்கையும் ஆய்வு செய்து நிதானமாக அதே நேரம் அதிரடியாக தீர்ப்பு வழங்குவதில் நீதிபதி மணிக்குமார் முதன்மையானவர். அதனால் நீதிமன்ற வளாகத்தில் மணிக்குமாருக்கு நல்ல பெயர் உண்டு.

குறிப்பாக நீர்நிலை ஆக்கிரமிப்பு, கட்டாய ஹெல்மட் அமல், மழைநீர் சேகரிப்பு போன்ற முக்கிய வழக்குகளில், தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். இந்த நிலையில் நீதிபதி எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. 

கொலீஜியத்தின் பரிந்துரையை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் குடியரசுத் தலைவரிடம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஒப்புதல் கோரப்பட்டது. அதன்படி எஸ்.மணிக்குமாரை கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.