ரயில்வே துறையில் தனியாருக்கு கடும் எதிர்ப்பு! கொந்தளிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி!

இந்தியா முழுவதும் ரயில்வேயை தனியாருக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் வேலையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.


இரயில்வே நிர்வாகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு விவேக் தேவ்ராய் தலைமையில் குழு அமைத்தது. இக்குழு 300 பக்கங்களைக் கொண்ட பரிந்துரையை மத்திய அரசுக்கு 2015-ம் ஆண்டு வழங்கியுள்ளது.உலகில் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமாக இரயில்வே துறை இயங்கி வருகின்றது.

நாடு முழுவதும் 12,6174 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2.30 கோடி பயணிகள் பயணித்து வருகின்றனர். நாடு முழுவதும் 7421 சரக்கு ரயில்கள் (கூட்ஸ்) இயக்கப்பட்டு வருகின்றது.

பொருள் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் 1.16 லட்சம் கி.மீ. தூரத்திற்கு இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பொதுத்துறையில் 14 லட்சம் தொழிலாளர்களும், அதிகாரிகளும் பணிபுரிந்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து சேவையை பொதுத்துறையில் இருந்து தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்துடன் விவேக்ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன.

இந்த மோசமான பரிந்துரைகளில் சிலவற்றை மத்திய அரசு நடைமுறையில் நிறைவேற்றி விட்டது. ரயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவையில்லை என்ற குழுவின் பரிந்துரையை ஏற்று தனி நிதிநிலை அறிக்கை முன்வைப்பதை கைவிட்டு விட்டது. அதனை மத்திய பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் அவசியமில்லை - என்பதையும் செயல்படுத்தும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறையின் பயணிகள் ரயிலை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று,

தற்போது தமிழ்நாடு உட்பட சில ரயில்வே மண்டலங்களில் பயணிகள் இரயில்களை ரத்து செய்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது.

ரயில்களை தனியாரிடம் விடுவதன் மூலம் அவர்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளவும், லாபம் தரக்கூடிய வழித்தடத்தில் மட்டுமே ரயில்களை இயக்கி, பயணிகள் சேவையை சுருக்கி விடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஓரளவுக்கு பாதுகாப்புடனும், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.. நாட்டு மக்கள் நலன் கருதி விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வதுடன்,

இரயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக அனைவரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று அறிவித்திருக்கிறார் மாநிலச் செயலாளர் முத்தரசன்.