தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ! ஒரே வாரத்தில் 3வது அசம்பாவிதம்! பீதியில் விஜய்!

சென்னை மீனம்பாக்கம் பின்னி மில் ஆலையில் நடிகர் விஜய் படத்தின் படப்பிடிற்காக போடப்பட்டிருந்த அரங்குகள் தீ விபத்தில் சிக்கி நாசமாகின.


விஜயை வைத்து இயக்குநர் அட்லி இயக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் பிரமாண்ட செட் போடப்பட்டு வந்தது.

இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கிகள், தேவாலயம், கடைகள் உள்ளிட்டவற்றுடன் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று பிற்பகலில் திடீரென பற்றிய தீ திரைப்பட அரங்கு முழுவதும் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அரங்குகள், ஜெனரேட்டர் ஆகியவை எரிந்து நாசமாகின. அங்கு இன்று படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பதால் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் ஒருவர் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி – துணை நடிகை இடையே பிரச்சனை வெடித்தது. தற்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள்ளாக விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்துள்ள 3வது அசம்பாவிதம் இதுவாகும். எனவே விஜய் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் பெரும் பீதியில் உள்ளனர்.