நினைவாற்றலை அதிகரிப்பது மட்டுமல்ல.. இன்னும் ஏராள நன்மைகள் வல்லாரை கீரையில்!

வல்லாரை கீரையின் சிறப்பே முழு தாவரத்தையும் நீங்கள் மருந்தாக பயன்படுத்தலாம். இதன் சுவை கசப்பாக இனிப்பூட்டும் சுவையுடன் இருக்கும். உடம்பிற்கு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. மூளைக்கு ஊக்கியாக, மன அழுத்தத்தை விரட்டும் டானிக்காக செயல்படுகிறது.


வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதனால் நம் மூளையின் செயல்பாட்டிலும் பெரிய பங்காற்றுகிறது.

வல்லாரையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது செல்கள் பிறழ்ச்சி அடைந்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடன்கள் உதவுகின்றன. வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்கள் நம்மை தாக்காது.

இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.